கல்கியில் வந்த எனது சிறுகதை (01-05-2011) – கிழக்கும் மேற்கும்

படித்தவர்களும், அரசியலும்

நிரம்ப படித்த சரத்பாபு என்ற இளைஞர் சென்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. அதற்கு முன்பு லோக்பரித்ரான் (?) என்று ஞாபகம், அவர்களுக்கும் இதே கதிதான்.

படித்தவர்கள் அரசியலில் சாதிக்கவே இல்லையா? நன்றாக யோசித்துப் பார்த்தால் மகாத்மா காந்தி அடிகளும், அறிஞர் அண்ணாவும் நிரம்ப படித்தவர்கள். இவர்களைத் தவிர நம்மால் பல உதாரணங்களைக் காட்ட முடியும். நான் ஏன் இந்த இருவரையும் எடுத்துக் கொண்டேன் என்றால் இவர்கள் சாதித்ததை மற்றவர்கள் சாதித்தார்களா என்பது சற்று சந்தேகம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களின் கொள்கைகள் ஒருசிலருக்கு சரிபட்டுவராமல் இருக்கலாம், அது இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லை. (காந்தி சுதந்திரத்திற்குப்பின் அரசியலில் ஈடுபடவில்லை. ஆனாலும் அவரை அரசியல்வாதி என்று ஏற்றுக் கொள்வோம்.)

மதுரையில் ஏழை மக்களைப் பார்த்துவிட்டு தன் உடமைகளை துறந்ததாகட்டும், சுபாஷ் சந்திரபோஸ் எவ்வளவு முறை எடுத்துக் கூறியும் அஹிம்சையே தன் வழி என்று இருந்ததாகட்டும், பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்ததாகட்டும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கை சரிவர உபயோகப்படுத்தியதாகட்டும் இவர்களின் ஆளுமையும், புத்திசாலித்தனமும் அபாரமானது. இவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் இந்த மாதிரி ஆயுதங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதில் எவ்வித தவறும் இல்லை.

காந்தி அரசியலுக்கு வந்தபொழுது மற்றபிற தலைவர்கள் களத்தில் ஏற்கனவே இருந்தார்கள். அண்ணா அரசியலில் குதித்தபொழுதும் அதே போல்தான். வியூகத்தை உடைத்துக் கொண்டு அவர்களால் மட்டும் எப்படி ஜொலிக்க முடிந்தது என்று பார்த்தால் இந்த மாதிரி ஒருசில ‘மக்களைப் பிடித்திழுக்கும்’ மாற்றங்களும், அவர்களின் பிடிவாத குணமும் தான்.

உலக மாற்றம் காரணமாக இந்த மாதிரி ‘தன்னிலைப்பாடுகளை’ செயல்படுத்துவதற்கு யாருக்கும் வசதியிருப்பதில்லை. அண்ணா ஓர் எழுத்தாளராக இருந்தார். அந்த ஊதியம் அவருக்கு அன்றைய தேதியில் போதுமானதாக இருந்திருக்கும். அப்படி இப்பொழுது இருக்க முடியுமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு இன்றைக்கு கட்சிகள் தனக்கென ஒரு சானலை வைத்துக் கொண்டு மறைமுகப் பிராச்சரத்தில் 24*7 மும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. கட்சிகள் தன் பலத்தை உபயோகப்படுத்தி அடுத்தவர்களை வளரவிடாமலும் தடுக்கின்றன. வட இந்தியாவில் ஒருவர் தமிழக தலைவரை தவறாகக் கூறிவிட்டார். அதற்கு சட்டப்படி, அவரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல், அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் வந்து தமிழ் நாட்டில் சிறிய கட்சியாக இருக்கும் சம்பந்தபட்ட கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இங்கே நான் இந்த கட்சியை மட்டும் குறை கூறவில்லை. இந்த மாதிரி எல்லாக் கட்சிகளும் தத்தம் செல்வாக்கை உபயோகபடுத்தி மிரட்டல் விடுக்கின்றன. துஷ்பிரயோகம் செய்கின்றன. இந்த மாதிரி மிரட்டல் அந்த காலத்தில் நடந்ததா என்றால் இல்லை என்றுதான் ஊகிக்கத் தோன்றுகிறது.

தவிர படித்தவர்களும் தங்கள் வேலை, குடும்பம் இதற்கு கட்டுப்பட்டு அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். படிக்காதவர்களை ஒப்பிட்டு பார்க்கையில் படித்தவர்கள் இந்த காலத்தில் சற்று பயந்தாகொள்ளியாகத் தான் இருக்கிறார்கள்.

மன்மோகன் சிங் மாதிரி எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? அப்படியே கிடைத்தாலும் அரசியல் கட்சிக்கு உட்பட்டு செயல்படாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமை கிடைக்க வேண்டும். படிக்காதவர்கள் அரசியலில் ஆளுமை செலுத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்திற்கு அவ்வளவு நன்மை அன்று!

சமீபகாலமாக படித்தவர்களுக்கு அரசியல் எட்டாக்கனியாகிவிட்டது என்பது தான் உண்மை!!!

திரைக்கதை, சினிமா மீது ஆர்வம் உள்ளவர்க்கு,

ஆங்கில திரைப்பட திரைக்கதைகளை இந்த இணைய தளத்தில் காணலாம். மிகவும் சுவாரஸ்யமான தளம். ஆங்கில தொலைக்காட்சி சம்பந்தபட்ட நாடகக்கதைகளையும் இங்கே காணலாம்.

http://www.simplyscripts.com/full_movie.html

இந்திய இரத்தம்

சில வருடங்களுக்கு முன், என் நண்பனுக்கு அமெரிக்காவில் நேர்ந்த ஓர் அனுவம் தான் இக்கட்டுரை!

என் நண்பன் சமூக நல விரும்பி! ‘ஊரைக் காப்பாற்றுவேன், நாட்டைக் காப்பாற்றுவேன்’ என்று சதா சொல்லி கொண்டிருப்பவன். வேலை நிமித்தமாக, அமெரிக்காவில் வசித்தாலும் இந்திய இரத்தம், இந்திய உணர்வு என்றிருப்பவன். பாரதியின் பேரன் என்று மனதில் நினைப்பு! நல்லது தான், தவறில்லை. அநியாயங்களைக் கண்டால் அவன் இரத்தம் கொதிக்கும். சாதரணமாகவே இரத்தம் கொதிப்பது நன்றன்று. போதாத குறைக்கு, இவன் இரத்தம் ‘O -ve’ வேறு. கேட்கவே வேண்டாம். அரிய வகை!

நாங்கள் அப்போது ஸால்ட் லேக் சிட்டியில் (யூட்டா மாகாணம்) வசித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் வெள்ளிக்கிழமை, நாங்கள் வழக்கம் போல் அலுவலகம் சென்றிருந்தோம். அன்று காலை ஒரு மின்னஞ்சல் வந்தது. ஸால்ட் லேக் சிட்டி ரோட்டரி சங்கமோ, லாட்டரி சங்கமோ அந்த இரத்ததான முகாமிற்கு ஏற்பாடு செய்து அழைப்பு விடுத்திருந்தது.

நண்பன் – பாரதி பேரன் – இரத்தம் கொதிக்க என் இடத்திற்கு ஓடி வந்து, “டேய்! இன்னிக்கு மத்யானமே இந்த ப்ளட் கேம்ப்க்கு நாம ரெண்டு பேரும் போறோம், ரெடியாரு” என்றான்.

நான் அதற்கு, “ஓங்கி ஒண்ணு விட்டேன்னு வச்சுக்கோ வாய் வெத்தல பாக்கு போட்டுக்கும்” என்றேன்.

“டேய்! தொட நடுங்கி, ஒழுங்கா மரியாதயா வந்துடு அவ்வளவுதான்” என்றான்.

“போடா ஃபூல்”

“உடம்புக்கு நல்லது டா டொனேட் பண்ண பண்ண….அப்புறம் பாரதி சொன்ன மாரி ‘இன்று புதிதாய் பிறந்தோம்’ ங்கிற மாரி நம்ம ஒடம்புல புது ரத்தம் பாய ஆரம்பிச்சிடும் டா….ஃப்ரெஷ்ஷா ஆயிடும்” என்று என்னை ஒருவாறு சம்மதிக்க வைத்தான்.

“அப்பா சாமி, நான் புதுசா கல்யாணம் ஆனவன்….உனக்கு ட்ரைவர் வேல வேண்ணா பாக்கறேன்….என்னால தானமெல்லாம் பண்ண முடியாது” என்றேன் ஒரே பிடிவாதமாக.

“சரி வந்து தொல….இந்த வாட்டி அங்க வந்து பார்த்தா அடுத்த தடவ நீயே டொனேட் பண்ணுவ”

“என்னால முடியாது பா….நான் தான் ஒன்ட முன்னயே சொல்லிருக்கேன்ல….என்ன டிஸ்டர்ப் பண்ணாத….ஒன்ன ட்ராப் பண்றேன்ல அதுக்கே நீ சந்தோஷப்பட்டுக்கணும் சொல்லிட்டேன்….” என்றேன்.

நான் ஒருமுறை அப்பல்லோ, நந்தனம்க்கு இரத்த தானம் பண்ணுவதற்காக சென்றிருந்தேன். அங்கே பாட்டிலில் இரத்தம் எடுக்க எடுக்க எனக்கு பீ.பி. அதிகம் ஆகி மயக்கம் போட்டுவிட்டேன். அப்புறம் இரத்த தானம் செய்ய வந்த எனக்கு யாரோ இரத்தம் வழங்கி உயிர் பிச்சைப் போட்டார்கள். அன்று முதல் இரத்த தானம் என்றாலே எனக்கு குடலை என்னமோ செய்வது போல இருக்கும்.

“ஒனக்கு ஒண்ணு தெரியுமா, O-ve பிளட்டுக்காக என் ஃப்ரெண்ட் ஒருவாட்டி அண்ணா நகர்லேந்து மைலாப்பூர் வரைக்கும் தெரு தெருவா அலையாத கொறையா அலஞ்சுருக்கான் தெரிஞ்சுக்கோ…..அப்போ ரெண்டு மாசத்துக்கு முன்னாடி தான் நான் டொனேட் பண்ணிருந்தேன்….அதனால அவன் ஃபாதருக்கு கொடுக்க முடியல….அவ்வளவு டிமாண்ட்…..சும்மா இல்ல”

அப்புறம் அன்று மதியம் நானும், என் நண்பனும் இரத்த தானத்திற்கு சென்றிருந்தோம். அது ஒரு பெரிய செவ்வகக் கூடம். கூடம் முழுமைக்கு சேர்த்து ஒரு பெரிய ராட்சஸ
சாண்டிலியர் ஒன்று நடுவாந்திரமாக தொங்கி கொண்டிருந்தது. பெரிய கூடமாகையால் கூட்டம் பெரியதாகத் தெரியவில்லை. நான் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டேன். நண்பன் இரத்த தானம் வழங்க இருந்த கும்பலுடன் ஐக்கியமானான். அவனுக்கு ஒரு காகிதம் கொடுத்து அவன் வரலாறை நிரப்பிக் கொடுக்குமாறு கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அமெரிக்காவில் இது வழக்கம் தானே! பேனாவை எடுத்து காகிதம் ஒன்றில் ஏறக்குறைய 10 நிமிடம் எழுதிக் கொண்டே இருந்தான். 7-8 அறைகள் இருந்தன தானம் வழங்குவதற்கு. இவன் 30நிமிடம் கிட்ட காத்திருந்து இரத்தம் தானம் செய்ய ஓர் அறைக்குச் சென்றான். சென்றவன் சென்ற மாத்திரத்திலேயே வெளியேறினான்.

என்னை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவன் என் அருகாமையில் வர வர ஏதோ தவறு நடந்தது போல் என மனதிற்கு புரிந்தது. என் முன்னே வந்து நின்றவன் இரத்தம், ‘சாம்பார்’ போல் கொதிப்பதை உணரமுடிந்தது.

“என்னடா என்ன ஆச்சு? எதாச்சும் ப்ராப்ளமா?” என்றேன்.

கொஞ்ச நேரம் பேசாமல் நின்று கொண்டிருந்தான். சிறிது அவகாசம் எடுத்து சொல்ல ஆரம்பித்தான்.

“டேய்! உள்ள போனேன்டா….நான் எந்த கன்ட்ரீன்னு கேட்டான்டா அங்க இருந்தவன்….இண்டியா, நான் இண்டியன்னு சொன்னேன்…எவ்வளவு வருஷமா யூ.எஸ் ல இருக்கன்னான்…..ஒரு பத்து மாசமான்னேன்…..அப்பன்னா நீ ப்ளட் டொனேட் பண்ண முடியாது….” என்று மூச்சு விடாமல் சொல்லிக் கொண்டேயிருந்தான்.

“ஏன்டா?” என்று குறுக்கிட்டேன்.

“இண்டியா மாரி கன்ட்ரீஸ்லாம் மலேரியா அஃபெக்டட் கன்ட்ரீஸாம்….கொறஞ்சது ஆறு வருஷமாவது யூ.எஸ். ல இருந்திருந்தா தான் ப்ளட் டொனேட் பண்ண அலவ் பண்ணுவாங்களான் டா…ரொம்ப டிஜெக்டட் ரா மச்சி” என்று சொன்னான் பாரதி பேரன்.

நானும்தான்!

வருகைக்கு நன்றி!

  • 1,740 வருகை
Follow

Get every new post delivered to your Inbox.