படித்தவர்களும், அரசியலும்

நிரம்ப படித்த சரத்பாபு என்ற இளைஞர் சென்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெற முடியவில்லை. அதற்கு முன்பு லோக்பரித்ரான் (?) என்று ஞாபகம், அவர்களுக்கும் இதே கதிதான்.

படித்தவர்கள் அரசியலில் சாதிக்கவே இல்லையா? நன்றாக யோசித்துப் பார்த்தால் மகாத்மா காந்தி அடிகளும், அறிஞர் அண்ணாவும் நிரம்ப படித்தவர்கள். இவர்களைத் தவிர நம்மால் பல உதாரணங்களைக் காட்ட முடியும். நான் ஏன் இந்த இருவரையும் எடுத்துக் கொண்டேன் என்றால் இவர்கள் சாதித்ததை மற்றவர்கள் சாதித்தார்களா என்பது சற்று சந்தேகம் தான் என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களின் கொள்கைகள் ஒருசிலருக்கு சரிபட்டுவராமல் இருக்கலாம், அது இந்தக் கட்டுரைக்குத் தேவையில்லை. (காந்தி சுதந்திரத்திற்குப்பின் அரசியலில் ஈடுபடவில்லை. ஆனாலும் அவரை அரசியல்வாதி என்று ஏற்றுக் கொள்வோம்.)

மதுரையில் ஏழை மக்களைப் பார்த்துவிட்டு தன் உடமைகளை துறந்ததாகட்டும், சுபாஷ் சந்திரபோஸ் எவ்வளவு முறை எடுத்துக் கூறியும் அஹிம்சையே தன் வழி என்று இருந்ததாகட்டும், பெரியாரை விட்டுப் பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்ததாகட்டும், எம்.ஜி.ஆரின் செல்வாக்கை சரிவர உபயோகப்படுத்தியதாகட்டும் இவர்களின் ஆளுமையும், புத்திசாலித்தனமும் அபாரமானது. இவர்கள் தங்களை நிலைப்படுத்திக் கொள்ளத்தான் இந்த மாதிரி ஆயுதங்களை உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் என்றும் எண்ணத் தோன்றுகிறது. அதில் எவ்வித தவறும் இல்லை.

காந்தி அரசியலுக்கு வந்தபொழுது மற்றபிற தலைவர்கள் களத்தில் ஏற்கனவே இருந்தார்கள். அண்ணா அரசியலில் குதித்தபொழுதும் அதே போல்தான். வியூகத்தை உடைத்துக் கொண்டு அவர்களால் மட்டும் எப்படி ஜொலிக்க முடிந்தது என்று பார்த்தால் இந்த மாதிரி ஒருசில ‘மக்களைப் பிடித்திழுக்கும்’ மாற்றங்களும், அவர்களின் பிடிவாத குணமும் தான்.

உலக மாற்றம் காரணமாக இந்த மாதிரி ‘தன்னிலைப்பாடுகளை’ செயல்படுத்துவதற்கு யாருக்கும் வசதியிருப்பதில்லை. அண்ணா ஓர் எழுத்தாளராக இருந்தார். அந்த ஊதியம் அவருக்கு அன்றைய தேதியில் போதுமானதாக இருந்திருக்கும். அப்படி இப்பொழுது இருக்க முடியுமா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு இன்றைக்கு கட்சிகள் தனக்கென ஒரு சானலை வைத்துக் கொண்டு மறைமுகப் பிராச்சரத்தில் 24*7 மும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன. கட்சிகள் தன் பலத்தை உபயோகப்படுத்தி அடுத்தவர்களை வளரவிடாமலும் தடுக்கின்றன. வட இந்தியாவில் ஒருவர் தமிழக தலைவரை தவறாகக் கூறிவிட்டார். அதற்கு சட்டப்படி, அவரை நீதிமன்றத்திற்கு வரவழைத்து தண்டனை பெற்றுத் தந்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல், அந்த கட்சியைச் சேர்ந்தவர்கள் ஊர்வலம் வந்து தமிழ் நாட்டில் சிறிய கட்சியாக இருக்கும் சம்பந்தபட்ட கட்சியின் அலுவலகத்தை முற்றுகையிட்டு பகிரங்கமாக மிரட்டல் விடுத்தனர். இங்கே நான் இந்த கட்சியை மட்டும் குறை கூறவில்லை. இந்த மாதிரி எல்லாக் கட்சிகளும் தத்தம் செல்வாக்கை உபயோகபடுத்தி மிரட்டல் விடுக்கின்றன. துஷ்பிரயோகம் செய்கின்றன. இந்த மாதிரி மிரட்டல் அந்த காலத்தில் நடந்ததா என்றால் இல்லை என்றுதான் ஊகிக்கத் தோன்றுகிறது.

தவிர படித்தவர்களும் தங்கள் வேலை, குடும்பம் இதற்கு கட்டுப்பட்டு அரசியலுக்கு வர பயப்படுகிறார்கள். படிக்காதவர்களை ஒப்பிட்டு பார்க்கையில் படித்தவர்கள் இந்த காலத்தில் சற்று பயந்தாகொள்ளியாகத் தான் இருக்கிறார்கள்.

மன்மோகன் சிங் மாதிரி எத்தனை பேருக்கு வாய்ப்பு கிடைக்கும்? அப்படியே கிடைத்தாலும் அரசியல் கட்சிக்கு உட்பட்டு செயல்படாமல் தன்னிச்சையாக முடிவெடுக்கும் உரிமை கிடைக்க வேண்டும். படிக்காதவர்கள் அரசியலில் ஆளுமை செலுத்திக் கொண்டிருப்பது எதிர்காலத்திற்கு அவ்வளவு நன்மை அன்று!

சமீபகாலமாக படித்தவர்களுக்கு அரசியல் எட்டாக்கனியாகிவிட்டது என்பது தான் உண்மை!!!

Advertisement