குழந்தையும் தெய்வமும்!!!!

என் ஒரு வயது குழந்தையிடமும், பக்கத்து வீடுகளில் வசிக்கும் 5 வயதுக்குள் இருக்கும் வாண்டுகளிடம் இருந்தும் தினம் தினம் பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொண்டே இருக்கிறேன். அந்த குழந்தைகளை வீட்டு வாசலிலோ, சோபாவிலோ அமர்ந்து கொண்டு கூர்ந்து கவனித்துக் கொண்டே இருந்தால் போதும் வாழ்க்கையில் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு உடனே கிடைத்துவிடும்.

1) குழந்தைகள், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் முழு ஆற்றலுடன் வலம் வருகிறார்கள். கீழே விழுந்தாலோ, அடி பட்டாலோ ஒரு நிமிடம் அழுகை. சமாதானம் அடைந்தால், மறுபடியும் முழு ஆற்றல் உடம்புக்கும், மனதுக்கும் திரும்ப வந்துவிடும். கவலை காற்றோடு பறந்து போய்விடும். ஆனால் நமக்கு சில சமயம் காலை எழுந்தவுடன் ஒரு இனம் புரியாத கவலை நம் மனதில் புகுந்து நம் முழு ஆற்றலையும் பறித்துக் கொள்கிறது.
2) நிகழ்காலத்தில் மட்டும் வாழ்வது. கடந்த காலம் பற்றியோ, எதிர்காலம் பற்றியோ எந்த கவலையும் கிடையாது. இதனால் தான் அவர்களிடம் முழு ஆற்றல் எப்பொழுதும் நிரம்பி வழிகிறதோ? நம்முடைய பல நாட்கள் கடந்தகால சொதப்பல்களை அசைபோடுவதிலும், எதிர்கால விஷயங்களை நினைத்து மனது வெம்முவதிலுமே கழிகிறது.
3) வீட்டில் இருப்பவர்களையும், அவர்கள் செய்வதையும் அவர்களுக்கே தெரியாமல் கூர்ந்து நோட்டம் விடுவது. அதிலிருந்து எல்லாவற்றையும் கற்றுக் கொள்வது. புதிது புதிதாக கற்றுக் கொள்ள ஆர்வத்தை வளர்த்துக் கொண்டே இருப்பது. கேள்வி கேட்பது, டிவியை நோண்டுவது, லேப்டாப்பை நோண்டுவத, அம்மாவுக்கு சமையலில் உதவி புரிவது, அப்பா கார் துடைக்கும் போது டவல், சோப்பு தானாகவே முன்வந்து கொடுப்பது என்று ஒவ்வொரு நாளும் ஒரு புது விஷயம் கற்றுக் கொள்கிறார்கள். கல்லூரி நாட்களில் சிம்ரன் வெறியனான என் நண்பன் அவர் படத்தை சுமார் 100 தடவை எங்களுக்குத் தெரிந்தே பார்த்தான். நேரம் பாழாவது, அரைத்த மாவை அரப்பதைப் பற்றி நாம் யாரும் கண்டு கொள்வதேயில்லை.
4) யாரிடமும் ஈகோ பார்ப்பது கிடையாது. நேற்று சண்டை போட்டவனிடம் இன்று ஜாலியாக விளையாடுவது. எனக்குத் தெரிந்த இரண்டு நண்பர்கள் ஏதோ ஒரு மன்ஸ்தாபத்தால் பிரிந்து சுமார் 18 வருடங்கள் பேசாமல் இருந்தார்கள். அப்புறம் ஏதோ ஒரு தருணத்தில் சந்தித்துக் கொண்டு பேசி கொண்டதாக கேள்விப்பட்டேன்.
5) ஆபத்து என்றால் உடனே அறைகூவல் விடுவது. இது அலுவலகத்திற்கு மிக அத்தியாவசமானது. அம்மா, “இவன் என்ன அடிக்கறான், இவன் என்னய மட்டும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்ள மாட்டேங்கறான்” என்று உடனுக்குடன் சிவப்புக் கொடி (ரெட் ஃப்ளாக்) உயர்த்துவது. பிரச்சினைக்கு உடனுக்குடன் தீர்வு காண விழைவது. அதை விடுத்து, ஒரு விஷயத்தை மனதில் ஏற்றிக் கொண்டு குழப்பி அடிப்பது, தீர்வை பேசிமுடிக்காமல் இழுத்து அடிப்பது என்று பல தவறுகளை நாம் செய்கிறோம். நான் சில வருடங்கள் முன்பு அலுவலகத்தில் ஒரு பிரச்சினையை சொல்லலாமா வேண்டாமா என்று ஒரு மாதம் அசை போட்டு, அதன் பின் சொல்லிய பிறது, அது சப்பென்று முடிந்து போனது. என் ஆற்றல், நேரம், நிம்மதி எல்லாம் அதனால் போச்சு.
6) படுத்தவுடன் தூங்கிவிடுவது. அதே போல், நிம்மதியாக தூங்குவது. ஆயினும், 8 அல்லது 9 மணி நேரத்திற்கு மேல் தூங்குவது கிடையாது. அலாரமெல்லாம் தேவையே இல்லை. டான் என்று தானாகவே காலை எழுந்து கொள்வது. என் நண்பன் ஒருவன் இருக்கிறான். தூங்க ஆரம்பித்தால் அவ்வளவு தான். வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஒரு மணி அல்லது இரண்டு மணிக்கு படுத்தால், சனி இரவு சாப்பிட எழுந்திருப்பான். பிறகு மறுபடியும் தூங்கி, ஞாயிறு காலை 10மணிக்கு எழுவான்.
7) இறுதியாக, இந்த காலத்திற்கு தேவையான மிக முக்கியமான பாயிண்ட். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதே கிடையாது. வயிறு நிரம்பி விட்டது என்று அதற்கு தோன்றிவிட்டால், கையால் அம்மாக் கையைத் தட்டி விடுவது, இல்லை வாயை இறுக மூடிக் கொண்டு விடுவது. நான் எல்லாம் வாய்ப்பு கிடைத்தால் இரண்டு பஃபே கட்டுவேன். அதன்பின் இரண்டு நாட்களுக்கு பசி எடுக்காமல் கஷ்டப்படுவேன்.

பெரிய பெரிய தத்துவ ஞானிகள், அறிஞர்கள் சொல்லிய விஷயங்களைவிட மிக ஆழமான, கருத்து செறிவுமிக்க விஷயங்களை நாம் குழந்தைகளிடம் இருந்து கற்றுக் கொள்ள முடியும் என்பது என் நம்பிக்கை. பெற்றோர்கள் குழந்தைகளை வளர்ப்பதற்கு பிரயத்தனப்படுவதை விடுத்து, தங்களை வளர்த்துக் கொண்டாலே சமுதாயத்தில் பெரிய மாற்றம் கொண்டுவர முடியுமோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது.

Advertisements

சமையலும் ஆணும்

சமீபத்தில் படித்தேன். “மனைவி இட்லி செய்தால், கணவன் சட்னி செய்யக் கூடாதா?” என்று எழுதினாராம் பாரதிதாசன். ஆனால் பாரதிதாசன் வீட்டில் அப்படி இருந்ததில்லை என்று அவர் மனைவி பேட்டியில் போட்டு உடைத்துவிட்டார் என்றும் படித்தேன். ஆண்கள் சமைப்பது என்பது இன்றைய காலக்கட்டத்தில் அவ்வளவு பரவலாக இருப்பதாகத் தெரிவதில்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாக கொஞ்சநஞ்ச ஆசாமிகள் இருக்கிறார்கள். அவர்கள் மனைவிகள் செய்த சமையலைப் பார்த்து ஆடி போய் அகப்பையை கையில் எடுத்த கனவான்கள். வலைப்பூ ஒன்று ஆரம்பித்து என்னமோ சமையல் அவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கு என்ற ரேஞ்சில் ரிசிப்பி எல்லாம் போட்டு பீற்றிக் கொள்வார்கள். காபி டிக்காஷனக்கு வெந்நீர் போடுவது, டீ பை கொண்டு டீ போடுவது, இப்படி அல்லகை வேலைகளைத் தான் பெரும்பாலான ஆண்கள் செய்கிறார்கள். இதே வெளியில் கடைக்குச் சென்று காய்கறி வாங்குவது, மளிகை வாங்குவதெல்லாம் விழுந்து விழுந்து செய்வார்கள். என் நண்பனின் மனைவி அவனிடம் இதைப் பற்றி சதா குறைகூறுவதாகக் கூறினான். எது ஆண்களைத் தடுக்கிறது என்று தெரியவில்லை. என் சிறுவயதில்லெல்லாம் என் அப்பா மாதம் தவறாமல் மூன்று நாள் சமைத்துவிடுவார். எப்போதாவது சமைப்பதாலும் அம்மா சமையலை விட வித்தியாசமாக இருப்பதாலும் ரொம்ப பிடித்துவிடும். இந்த காலத்தில் ஆண்களுக்கு அந்த மாதிரி சந்தர்ப்பம் பெரும்பாலும் கிடைக்காமல் போய்விட்டது.

நிற்க. என் நண்பனுக்கும் அவன் மனைவிக்கும் இது பற்றி பெரிய வாக்குவாதம் வந்ததாக சொன்னான். என் நண்பன் கோபத்தில் “ஏண்டீ, நீங்க தானே இத்தனை நாளா புள்ளைகள வளர்த்தீங்க…..சமையல் எல்லாம் சொல்லிக் கொடுத்து வளக்க வேண்டியது தானே?” என்று கத்திவிட்டேன் என்றான். அது ஓரளவு உண்மையே. எங்கள் வீட்டில் 80களின் இறுதியில் என் ஒன்றுவிட்ட சகோதரி தங்கி கல்லூரி போவாள். அவளை என் அம்மா காணவிட்டேன் என்றுதான் இருப்பார். எச்சலிட்டியா? இலையை தூக்கி ஏறிந்தியா? தட்டை அலம்பினாயா? என்று பெண்டு கழட பயிற்சி அளித்துக் கொண்டே இருப்பார். ஆனால், சம்மர் லீவுக்கு வந்த என் ஒன்றுவிட்ட சகோதர்கள் எல்லாம் தொந்தியும், படக்ஸும் பெருத்து ஊருக்குச் சென்றதுதான் மிச்சம்.

அந்த நண்பன் ஒரு நாள் என்னை செல்பேசியில் அழைத்தான். ஒரே அங்கலாய்ப்பு! அவன் மனைவி நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவனை பொரித்து எடுக்கிறாளாம். தனக்கு உண்மையாக நேரம் கிடைப்பதே இல்லை. வாரத்துல ஒரு நாள் சமையேன் என்று சொல்லி பார்த்தாளாம் ஆரம்பத்தில். அதுவும் நடக்காது போனதால், ஒரு வேளையாவது குறைந்தபட்சம் சமைத்துத் தொளையேன் என்று ஆக்ரோஷப்பட்டுகிறாளாம். “என்னால் எங்க ஏரியாவிலுள்ள ஹோட்டல் எல்லாம் நன்றாக வாழ்ந்ததே ஒழிய, எங்கள் வீட்டில் பாத்திரம் சப்தம் கேட்டபாடில்லை.” என்று புலம்பினான்.

சரி, உன்னுடைய வீக்கெண்ட் எப்படி தான் கழிகிறது என்று சொல். அதை வைத்து அறிவுரை கூறலாமா என்று யோசிக்கிறேன் என்றேன்.

நண்பன் சொன்னான்.

வெள்ளியன்று மாலை அலுவலகத்திலிருந்து வரும்பொழுதே, காய்கறி, மளிகை எல்லாம் வாங்கி வந்துவிடுவேன். சனிக்கிழமை காலை 7.30மணிக்கு எழுந்திருப்பேன். நான் காப்பி டிக்காஷனக்கு வெந்நீர் போட்டு, அப்புறம் காபி குடித்துவிடுவேன். மனைவி 8 மணிக்கு எழுந்திருப்பாள். அவள் அவளுக்கும், குழந்தைகளுக்கும் காப்பி போட்டு குடிப்பாள். அதன் பின் மேகி நூடுல்ஸ், இல்லையென்றால் மெ.டி.ஆர் ரவா உப்புமாவிற்கு நீரை அடுப்பில் வைத்துவிட்டு பாத்ரூம் சென்றுவிடுவாள். நான் தண்ணீர் கொதி வந்தவுடன் நூடுல்ஸை போட்டு கிளறி விடுவேன். பின் நூடுல்ஸ் மிக்ஸை போட்டு அடுப்பை சிம்மில் வைத்து விடுவேன். அவள் வந்து நூடுல்ஸை இறக்கி எல்லோருக்கும் கொடுப்பாள். பின் தொலைக்காட்சி கொஞ்ச நேரம் பார்ப்போம். அப்புறம் மதிய சமையலுக்கு பீன்ஸ், இல்லை காரட் நறுக்கிக் கொடுக்க சொல்வாள். பீன்ஸ் நறுக்குவதைப் போல் கொடுமையான விஷயம் இந்த உலகில் இல்லை. முன்னாலும், பின்னாலும் கிள்ளி எறிந்துவிட்டு, பக்கங்களில் உள்ள நாறை பிய்த்து எடுத்துவிட்டு, பொடிபொடியாக நறுக்க வேண்டும். எப்படியும் நாலு பேர் சாப்பிட தேவையான பீன்ஸை நறுக்க முக்கால் மணி நேரம் ஆகிவிடும். இது தவிர, சாம்பாருக்கு போட ஏதாவது காய்கறி கொஞ்சம் நறுக்க சொல்லுவாள். அதன்பின் நான் குளித்துவிட்டு வருவேன். அதுவரை சுமார் இரண்டு மணி நேரம் அவள் டிவி பார்த்துக் கொண்டே இருப்பாள். அவள் அரிசியை களைந்து குக்கரில் வைத்து விடுவாள். “குக்கர் 5 சப்தம் வந்தவொடனே அணச்சுடு, அப்புறம் இந்த பீன்ஸ் பொரியலில் தண்ணி வத்திடுச்சுன்னா கொஞ்சம் ஊத்தி அப்பப்போ கிளறி விடு. சாம்பார் மறுக ஆரம்பச்ச ஒடனே இன்னும் கொஞ்சம் தண்ணி ஊத்தி காயெல்லாம் போட்டுடு” என்று சொல்லிவிட்டு செல்வாள். எப்படியும் முக்கால் மணிநேரம் ஆகும் குளித்துமுடிக்க. அப்புறம் அவள் வந்து சாம்பாருக்கும், பொரியலுக்கும் பொரித்துக் கொட்டுவாள். மதியம் ஒரு மணிக்கு சாப்பிடுவோம். அதன்பின் எல்லா பாத்திரத்தையும் டிஷ்வாஷரில் போட்டுவிடுவேன். டிஷ்வாஷரில் போடாத பாத்திரங்களை நானே தேய்த்துவிடுவேன். “சமைக்கத்தான் மாட்டேங்கற, பாத்திரத்தையாவது தேய்த்து கொடேன்” என்று அதட்டுவாள். அதே போல், இரவு ஏதவாது உப்புமா, கிச்சடி, தோசை, இட்லி, இல்லை வத்தக்குழம்பு என்று இருக்கும். அதற்கும் சங்கதி இதே மாதிரிதான். அவள் சமையலையும் கவனித்துக் கொண்டு யோகா செய்வாள். இப்படியே வீக்கென்ட் ஓடிவிடும்.

“நீ சொல்றதைக் கேட்டா தலைய சுத்துதுபா….உனக்கு என்னால் அட்வைஸ் சொல்ல முடியாது” என்றேன்.

“டேய், விளையாடாத…..நான் சொன்ன மாரி உங்க வீட்டுல வீக்கென்ட் எப்படி போகுதுன்னு சொல்லு…நான் புடிச்சிருந்தா ஃபாலோ பண்ணிக்கிறேன்” என்றான்.

“மச்சி, எனக்கு இன்னொரு கால் வருது. அப்புறம் பேசறேன்” என்று அவன் அழைப்பைத் துண்டித்து விட்டேன்.

எங்க வீட்டு ரிமோட்

எங்க வீட்டு ரிமோட் – தி.சு.பா.

http://tamilkushi.com/ta/தமிழ்வேலி-மின்-இதழ்/790-எங்கள்-வீட்டு-ரிமோட்-தி-சு-பா

டிவி ரிமோட்டினால் நாங்கள் படும் பாடு, எங்களால் டிவி ரிமோட் படும் பாடு சொல்லி மாளாது. உங்கள் வீட்டில் ரிமோட் எங்கெல்லாம் இருக்கும்? டிவி ஸ்டான்டில் இருக்கும், இல்லை சோபாவிலோ, ஹாலில் ஒரு மூலையிலோ இருக்கும், கரெக்டா? ஆனால் எங்கள் வீட்டில் ரிமோட் கற்பனைக்கு அப்பாற்பட்ட இடத்தில் எல்லாம் இருக்கும். டிவி ஸ்டான்டுக்குள் இருக்கும் நியூஸ்பேப்பருக்குள் ஒளிந்து கொண்டிருக்கும், வாஷிங் மெஷினில் தோய்த்த துணிமணிகளுடன் இருக்கும், பரணில் இருக்கும், சமையலறையில் அஞ்சரைப்பெட்டிக்கருகில் இருக்கும், ஏன் ஒருமுறை பாத்ரூம் கிளாஸெட்டில் ஃபிளஷ் ஆகிக் கொண்டிருந்தது. இங்கே எல்லாம் எப்படிச் சென்றது என்றால் என் 5வயது பெண் பாதி உபயம், மனைவி மெகா சீரியல் பார்த்துக்கொண்டே பொரித்துக் கொட்டுவாள், நானும் என் பங்குக்கு அங்கே இங்கே என்று மொபைல் போனில் பேசிக்கொண்டே வைத்துவிடுவேன். ஒரு முறை பக்கத்துவீட்டில் இருந்ததாக அந்த வீட்டு குழந்தை என் பெண்ணிடம் கொடுத்தனுப்பினாள். ரிமோட் இப்படி கண்ட இடத்திற்கு செல்வதற்குக் காரணம் எவர் ஒருவர் ரிமோட்டைக் கையில் எடுத்தாலும் அதை கீழே வைக்க மனமில்லாமல் போகிற இடத்திற்கெல்லாம் எடுத்துக் கொண்டு போவது தான் காரணம். கீழே வைத்தால் போச்சு, அடுத்தவர் எடுத்து அவர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சியை மாற்றிவிடுவார்கள். அதன்பின் நீங்கள் உங்கள் நிகழ்ச்சிக்கு திரும்பி வரவே முடியாது.

எங்களிடம் இருப்பது ஸ்மார்ட் டிவி. அதனால் ரிமோட் இல்லையென்றால் டிவி ஒரு கொலு பொம்மைக்குச் சமானம். கண்டம் விட்டு கண்டம் கூட தொலைந்து இருக்கிறது ஒரு முறை. என் குறும்புக்காரக் குட்டி இந்தியா திரும்பி செல்லும் அப்பாவினுடைய லக்கேஜில் வைத்துவிட, அது லுஃப்தான்ஸாவில் சொகுசாக மெட்ராஸ் சென்றுவிட்டது. அப்புறம் என் அப்பா ஸ்கைப்பில் ஆன்லைனில் வந்து அதைக் காண்பித்தார். ஆர்வக்கோளாறில் ஸ்கைப் வழியாக டிவியை ஆன் செய்ய முடியுமா சேனலை மாற்ற முடியுமா என்று கூட பார்த்திருக்கிறோம். இதைப் பார்த்தால் உங்களுக்கு அசிங்கமாக தோன்றும். ஆனால் நிஜம். ரிமோட் வாங்கியே என் சொத்தில் பாதி கரைந்து இருக்கிறது. இதில் கொடுமை என்னவென்றால் புது ரிமோட் வாங்கிய மறுநாளே அல்லது அடுத்த வாரமே தொலைந்துபோன ரிமோட் கிடைத்துவிடும். தண்ணீர் பக்கெட்டில் ஓர் இரும்பு கரண்டி, கிடுக்கியை தண்ணீருக்குள் நன்கு மூழ்கி போட்டு வைத்தால் காணாமல் போன பொருள் கிடைத்துவிடும் என தஞ்சாவூர் பக்கக் கிராமங்களில் ஓர் ஐதீகம் என்று என் அம்மா சொன்னார். அதையும் முயற்சித்திருக்கிறோம். ஒரு சில முறை அப்படி செய்த உடனே கிடைத்துவிடும். சிலசமயம் அந்த கிடுக்கி துருபிடிக்கும் வரை கிடைக்காது. ரிமோட்டினால் இப்படி எக்ஸ்ட்ரா தண்ட செலவுகள் வேறு. ஆமாம், கிடைக்கும்வரை பக்கெட் பக்கமே போக மாட்டோமே! அப்புறம் அந்த பழைய ரிமோட் கிடைத்தவுடன் அதை என் பெண்ணுக்கு விளையாடக் கொடுத்துவிடுவேன். சிலபல வருடங்கள் கழித்துத்தான் எங்களுக்கு உறைத்தது, ரிமோட் ஏன் தொலைகிறதென்று. சும்மா இல்லாமல் திரும்ப கிடைத்த ரிமோட்டை பெண்ணிடம் விளையாடக் கொடுத்தால், அவன் என்ன செய்வாள் பாவம். கொஞ்ச நாளில் அதைத் தொலைத்து விட்டு, புது ரிமோட் தான் பழைய ரிமோட் என்று அதையும் விளையாட எடுத்துக் கொள்வாள். முடிவு, இரண்டு ரிமோட்டும் தொலைந்துவிடும். மூன்று வருடம் ஒரே வீட்டில் வசித்தோம். அந்த வீட்டைக் காலி செய்தபொழுது தான் தொலைந்த ரிமோட் எல்லாம் ஒவ்வொன்றாகக் கிடைத்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள், மொத்தம் பதினொன்று.

ஒருமுறை என் நண்பனிடம் எங்கள் வீட்டு ரிமோட் கதையைச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்தேன். அவன் சரியான குசும்புக்காரன். ரிமோட்டை வைத்து ஒரு வீட்டில் புருஷன் டாமினேட் செய்கிறானா அல்ல பொண்டாட்டி டாமினேட் செய்கிறாளா என்பதைக் கண்டுபிடிப்பது மிக சுலபம் என்று கொளுத்திப் போட்டான். நம்ம வீட்டில் இருக்கும் கஷ்டம் அடுத்தவீட்டில் இருந்தால் நமது கஷ்டம் முக்கால்வாசி சரி ஆகிவிடுமே? அதானால் எப்படி என்று அவனைக் கேட்டேன். பிரைம் டைம்ல ஒரு வீட்டுக்கு செல். அந்த டைமில் யார் கையில் ரிமோட் இருக்கிறதோ அவர் தான் டாமினேட் செய்பவர் என்றான். ஹை இது நல்லக் கதையாக இருக்கே? தனக்கு தெரிந்த நான்கைந்து நண்பர்கள் வீட்டுக்குச் சென்று இதை அனலைஸ் செய்தேன், என் அனாலஸிஸ் பக்கா என்றான். என் வீட்டில் சங்கதி எப்படி என்று எவ்வளவு யோசித்துப் பார்த்தும் எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை. சில நாட்கள் விட்டுப் பிடித்தேன். என்ன யோசிக்கிறீங்க? அதே தான். ப்ரைம் டைமில் ரிமோட் என் கையில் இருப்பதேயில்லை.

என்ன பல்லிளிக்க வேண்டி கிடக்கு. உங்க வீட்டுல எப்படி சேதி?

நம் கல்வியும் என் கேள்வியும்

தி.சு.பா.

நம் கல்வியும் என் கேள்வியும்

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏழை மக்கள் கட்சி) டெல்லி தேர்தலில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்த காரணத்தால் ஒரு கட்சி ஜெயித்து விடமுடியுமா? ஆட்சி பீடத்தில் ஏறிவிடுமா? என்றால் இந்திய அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் முடியும் என்றே தோன்றுகிறது. 1947லிருந்து 1967 வரை இருபது வருடங்களை விட்டுத் தள்ளிவிடலாம். அதன்பின் கட்சிகளின் நோக்குநிலையிலிருந்து பார்த்தால், இந்திய அரசியலில் பெரிய அதிரடி மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. மாற்றுக் கருத்தைக் முன்வைத்த கட்சிகள் ஆங்காங்கே ஆட்சியைப் பிடித்துள்ளன. மாற்றத்தைத் தருவதாக வந்த அக்கட்சிகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் ஒரே குட்டையில் ஊறியவையாக ஆகிவிடுகின்றன. ஏன்?

அரசியல்வாதிகளைத் திருத்திவிடுவதால் ஊழலைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடமுடியுமா? கண்டிப்பாக இல்லை. ஊழல் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தியாகத் தான் இருக்க முடியும். ஒரு பக்கம் மக்கள், மறுபக்கம் அதிகாரிகள், அரசியல்வாதிகள். இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டிக் காண்பிக்கிறார்கள். இருவருமே ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் தாம். சரி ஒரு வேளை சட்டம் சரியில்லையோ? அப்படியென்றால் சட்டம் கெடுபிடியாக இருக்கும் நாடுகளிலெல்லாம் ஊழலே இல்லையா?

என்னையே எடுத்துக் கொண்டால், சுமார் 15-17 வயது வரை எந்த பாவச் செயல்களிலும் நான் ஈடுபட்டதில்லை. ஒருவித பயம். அப்பா அதட்டுவார், கடவுள் கண்ணைக் குத்தும் என்று. படிதாண்டா பத்தினி மாதிரி தெரு தாண்டா பையன். ஆனால் வயது ஏற ஏற என்னால் இந்த சமத்து பையன் கெட்டப்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. நாம் கற்ற கல்வியும், அதில் சொல்லிக்கொடுக்கப்பட்ட நீதிக்கதைகளும் என்னவாயிற்று? இரத்தத்தில் கலந்த படிப்பு ஜீரணமாகி, மலமாக வெளியே வந்து விட்டதோ?

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கல்வி முறையில் மாற்றம் தேவையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, எவ்வளவு ரம்மியமான இசையைக் கேட்ட போதினும், சிம்பொனி இசையை சிறிது நேரம் கண்ணெதிரே கண்ட போதினும், இளையராஜா என்ற மாமனிதரின் இசை தான் என் மனதில் ஓட்டம் பிடிக்கிறது, துள்ளி ஆடுகிறது. அவரைத் தாண்டிய ஓர் இசை அறிஞரை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஏன்? அதற்கு காரணம் என் சிறுவயதில் அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கம். என் மரணப்படுக்கை வரை என்னால் இதை மாற்றிக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. அதே போல் தான் என் தந்தைக்கு சிவாஜி. அவர் அவரின் வெறித்தனமான ரசிகர். இந்த மாதிரி சிறுவயதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக கல்வி இருந்தால் ஊழலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே நம்புகிறேன். குறிப்பாக 10வயது முதல் 15வயது வரை உள்ள சிறார்களுக்கு இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கு ஒரே பாடம், ஒரே கருத்தை அவர் மனதில் திணிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு இதெல்லாம் எங்கு ஓடிவிடப் போகிறது. 15 வயதிற்கு மேல் படித்துக் கொள்ளலாமே? இந்த இணைய உலகில் இந்த படிப்புகள் எல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்று தோன்றுகிறது.

ஆறாவதிலிருந்து பத்தாவது வரை என்ன படித்தேன்? எதுவும் முழுசாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஆங்காங்கே படித்த ஒன்றிரண்டு மனப்பாட செய்யுள், ஆங்கிலத்தில் வந்த The Road not taken, Timid Tim இந்த மாதிரி செய்யுள், ப்ரோஸ், இப்படி ஞாபகம் வரக்கூடிய விஷயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஆம், நம் கல்வி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விட்டது. தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அது ஒரே கருத்தாக இருக்க வேண்டும், ஒரே விஷயமாக இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கரைப் போல, இளையராஜாவைப் போல. அந்த ஒரே கருத்து, ஒரே விஷயம் ஊழலை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வேண்டுமானால் கல்வியில் சுவாரஸ்யம் கூட அங்கே சுத்தி இங்கே சுத்தி முடிவில் ஊழல் ஒழிப்பிற்கு வந்து விட வேண்டும். மாணவர் சிந்தனையில் வேறு எதுவும் ஏறக்கூடாது, ஏற்றக்கூடாது. இப்படி செய்தால் நல்லதொரு மாற்றத்தை சமுதாயத்தில் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்.

மாற்று அரசியல் அமைப்பு – ஓர் எண்ணம்

மாற்று அரசியல் அமைப்பு – ஓர் எண்ணம் – தி.சு.பா.

ஏற்காடு தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாக்களை தினம் தினம் செய்தித்தாள்களில் படிக்கும்பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஓர் இடைத்தேர்தல் சீட்டுக்கு இந்த அளவு சண்டை / போட்டி தேவையா? குறைந்தபட்சம் இடைத்தேர்தலில் கூடவா நேர்மையை கடைபிடிக்க முடியாது? இது மட்டுமல்ல, சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே வெளியூரிலிருந்து திருச்சிக்குத் தாமதமாக வந்து சேர்ந்ததால், என் நண்பனொருவனால் சாயங்காலம் 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. நாலரை மணிக்கு நடையை சாத்துவதற்காக அதிகாரிகள் முடிவெடுத்துக் கொண்டிருக்க, இவன் போய் அங்கே நின்றால் இவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இவனுடைய ஓட்டை வேறு யாரோ ஒருவன் போட்டுவிட்டான். பத்து பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பே இந்த சங்கதி.

ஆசையை மனித மனங்களிலிருந்து அழிக்க முடியாது என்பது திண்ணம். தேர்தலில் அதிகம் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டை கும்மாங்குத்து குத்திவிடுவார்கள் பணத்திற்கு ஆசைப்படும் நபர்கள். எங்கள் பக்கத்து வீட்டில் ஓர் அறியாப் பெண் இருந்தாள். அவள் கணவன் அவளை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி நிர்பந்தித்தான். எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் வந்த சமயம். அவள் சற்று தத்துபித்தென்று இருப்பவள். ஏதோ ஒரு பொத்தானை அமுக்கி விட்டு கணவனிடம் சொல்ல பயப்பட்டு இரண்டு நாள் தூக்கம் இல்லாமல் நொந்து போவாள். என் அம்மாவிடம் வந்து, “அந்த பட்டானைத் தான்மா அமுக்கினேன் கரக்ட்டா?, அவர் வந்து கேப்பாரு….மாத்தி அமுக்கிட்டேன்னு சொல்லி மாட்டுக்குவேனோன்னு பயமா இருக்கு…” என்று அமுக்கியது ஒரு பொத்தான், தன் கணவனிடம் டுமீல் விட்டது மற்றொன்று என்று பிதற்றித் தள்ளுவாள். சில சமயம் நானும் என் நண்பர்களும் ஓட்டு போட வரிசையில் நிற்கும்பொழுது காரசாரமாக விவாதித்து விட்டு ஓட்டு போட்டிருக்கிறோம். எல்லாரும் ஒரு மனதாக தீர்மானித்து ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டிருக்கிறோம். ஒருசிலர் எங்கள் தலைவர் சொல்லிவிட்டார், சைகை காட்டிவிட்டார், அதனால் அந்த கட்சிக்குத் தான் என்று ஒற்றைக்காலில் ஓட்டு போட்டதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். உங்கள் தகவலுக்கு, அந்த ஒரு சிலர் நிரம்ப படித்த நபர்கள். அதாவது ஒரு மாலுக்கு செல்கிறோம். அங்கே முருகன் இட்லி கடையில் தின்பதா, சரவண பவனிலா, இல்லை அமெரிக்கன், மெக்ஸிகன் ஹோட்டலிலா என்று மனது அலைபாயும். மனது முருகனைத் தீர்மானிக்க, கால் சரவண பவனுக்கு செல்ல, கடைசியில் வாய் அமெரிக்கன் பிட்சா பர்க்கர் சாப்பிட இட்டுச் செல்லுமே, அந்த மாதிரி. அந்த நிமிடம் வரை எதுவும் நமது கையில் இல்லை. இந்தக் கணக்கு ஹோட்டலுக்கு, சினிமாவுக்கு ஒத்து வரும். தேர்தலுக்கு?

நமது தேர்தல் ஆணையம் பணம், நகைகளை கையும் களவுமாகப் பிடிப்பது, அரசியல்வாதிகளுக்கு நடுநிலையாக நோட்டீஸு அனுப்புவது என்று திறம்பட செய்து வருவது பாராட்டத்தக்கதே. 120 கோடி மக்களை இதனால் திருத்த முடிகிறதா? முடியுமா? என்றால் என்னிடம் பதில் இல்லை.

எனக்கு என்னமோ இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தில் நம்பிக்கை போயே விட்டது. மக்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து என்ன சுகம் கண்டார்கள்? அதற்கு மாற்றே இல்லையா? மன்னராட்சி பழைய பஞ்சாங்கம். அது இன்றைய தேதியில் காலாவதி ஆகிவிட்டது. ஏறக்குறைய உலகில் 80%த்திற்கும் மேற்பட்ட நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டே ஆட்சியைப் பிடிக்கின்றன. இந்த மாதிரி அவல நிலைகளை காணும் பொழுது ஏன் இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பை மாற்றக்கூடாது என்று தோன்றுகிறது. வேறு என்ன மாற்று இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதான் இந்த உபாயம் மனதிற்கு எட்டியது.

ஓர் எண்ணம் இங்கே!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், கலெக்டர்கள், ஜனாதிபதிகள் இவர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து, அந்த குழு திறமை அடிப்படையில் பிரதம மந்திரி, முதலமைச்சர்கள், முக்கிய மந்திரிகளை தேர்ந்தெடுத்தால் என்ன? இந்த தேர்வு மக்கள் மன்றத்தில் நடக்கலாம். திறமை என்றவுடன் நடுங்க வேண்டாம். அதற்கு நிரம்ப படித்திருக்க வேண்டும் என்று இல்லை. அவர் பிரதமராக, முதலமைச்சராக நல்ல அரசியல் அறிவு இருக்க வேண்டும், நாடு, மாநிலம் பற்றிய கனவு, கொள்கைகள் வேண்டும். இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் ஒவ்வொரு வருடமும் அந்தக்குழுவை நேரில் சந்தித்து அவர் எந்த அளவு பொருளாராதாரத்தில், இன்னபிற காரணிகளில் முன்னேற்றம் கொண்டு வந்திருக்கிறார் என்று நிரூபிக்க வேண்டும். இல்லையேல் அதிகாரக்குழு அவரைத் தூக்கிக் கடாசிவிடும். இந்த முறையால் தேர்தல் செலவு மிச்சம், தேர்தல் ஆணையத்திற்கும் தலைவலி குறைந்தது, இதெல்லாவற்றிற்கும் மேல் தேர்தல் கௌரவக் கொலைகள் எல்லாம் நின்று போய்விடும். குறிப்பாக நாட்டில் சப்தம், இரைச்சல் இருக்காது. தற்போதைய அரசியல் அமைப்பு, வருமான வரி இதற்கு மாற்று கண்டிப்பாகத் தேவை. இவை இரண்டையும் மையமாக வைத்தே 80% ஊழல்கள் நாட்டில், உலகில் தலைவிரித்து ஆடுகின்றன என் பொதுவான கருத்து.

தவிர இந்த புது முறையில் இப்பொழுது நடப்பது போல் தில்லுமுல்லுகள் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதே போல் மாற்று அரசியல் அமைப்பிற்கான ஓர் எண்ணம் என் மனதில் உதயமானது. அதை இங்கே சொல்ல விழைந்திருக்கிறேன். மற்றபடி அரசியல் மூத்த தலைவர்கள், ஊடகங்கள், அரசியல் ராஜதந்திரிக்கள் கூடித் தீர்மானித்து இதற்கான திட்டத்தைத் தீட்டலாம். என் மனதில் தோன்றிய பொறியை தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என்னால் மாற்று அரசியல் அமைப்பை முழுவதும் கற்பனை செய்ய முடியாது. அதற்கான நேரமும், தகுதியும் என்னிடம் இல்லை என்றே நம்புகிறேன்.

ஜெய் ஹிந்த்!!!

கடிதம்

கடிதம் – தி.சு.பா.

இடம்: அமெரிக்கா
தேதி: 18-நவம்பர்-2013
அன்பு வாசகர்களுக்கு,
வணக்கம். வீட்டில் எல்லோரும் நலமா? எல்லாரையும் விசாரித்ததாக சொல்லவும்.

சமீபத்தில் மகாகவி பாரதி தன் மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்றை படிக்க நேர்ந்தது. தன் மனைவியை காதலி என விளித்து, அவளுக்கு அறிவுரை வழங்கிய மகாகவியின் எழுத்து நடை என் மனதைச் சட்டென்று கொள்ளைக் கொண்டது. அன்றிரவு அக்கடிதம் பற்றியே அசை போட்டுக் கொண்டிருந்தேன். கடிதம் பற்றிய மலரும் நினைவுகளில் மூழ்கி போனேன். அற்றை நாளில் எவ்வளவு கடிதங்கள், காத்திருப்புகள். தபால்காரர் தெருக்கோடியில் வர தொடங்கிய உடனே இதயம் துடிதுடிக்க ஆரம்பிக்கும். இன்றைக்கு வயது முப்பதுகளின் நடுவிலும், நாற்பதுக்கு மேலும் இருந்தால் அவர்கள் ‘கடிதம்’ பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்வர்.

15பைசா, 25பைசா போஸ்ட்கார்டுகளில் எத்தனை தைரியமாக நம் உறவுகள், வீடு சம்பந்தமான ரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி அனுப்புவோம். தலைபோகிற காரியம் என்றால் மட்டும் ஒரு ரூபாய்க்கு இன்லேன்ட் லெட்டர் வாங்கி ஒட்டி அனுப்புவோம். அத்துனைக் கடிதங்களிலும் தமிழ் புகுந்து விளையாடியது. எனக்குத் தெரிந்தவரை அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி எல்லோரும் அழகுத்தமிழில் தான் கடிதம் எழுதி வந்தனர். வெறும் ஆறாவதே படித்த என் பெரியம்மா அவ்வளவு அழகான தமிழில் ஆந்திராவிலிருந்து கடிதம் போடுவாள். என்ன மிஞ்சிமிஞ்சி போனால் ஒரு போஸ்ட்கார்டில் இருபது வரி இருக்குமா? அப்படி வரிகள் அதிகமானால் இரண்டு கடிதம் உடனுக்குடன் போடுவார்கள். சிலசமயம் ஒன்றிரண்டு வரிகள் தானென்றால் பிள்ளையார்சுழிக்கு அருகில் இருக்கும் இடத்தில் எழுதுவார்கள். அதே போல் இடது பக்க மார்ஜினில் மேலிருந்து கீழ் எழுதி கழுத்து வலி வர வைப்பார்கள். என் அம்மாவுக்கு மட்டும் புரிய வேண்டும் என்று ஒரு சில வரிகளை கோடிட்டு காட்டுவாள் பெரியம்மா. அதெல்லாம் சிறுவயதில் புரியாது. வயது ஆக ஆக புரிய ஆரம்பித்தது. கடிதம் வந்த நாளில் வீட்டில் தெற்கும் வடக்குமாக நடக்கையில் “அந்த வரில என்ன சொல்லிருந்தா”, “இதைப் பத்தி என்ன கேட்டுருந்தா பெரிம்மா” என்று ஐந்தாறு முறை படிப்போம். அதன்பின் பதில் போடுவோம். ஒருவர் கடிதம் போட்டது முதல், பதில் கடிதம் கிடைக்கும்வரை குறைந்தது உள்ளூராக இருந்தால் 3-4 நாள் ஆகும், அதுவே வெளி மாநிலம், வடக்கே பாம்பே, டெல்லியாக இருந்தால் 10நாள் ஆகிவிடும். மக்களுக்கு அவ்வளவு பொறுமை இருந்தது. இப்பொழுது இரண்டு முறை கால் பண்ணி எடுக்கவில்லை என்றால் அவரிடம் வள்ளென்று விழுவோம்.

என் வாழ்நாளில் நான் பதைபதைப்புடன் காத்திருந்த கடிதங்கள் என்று பார்க்கப் போனால், அவை என் தந்தையிடமிருந்து வரும் மணியார்டர் ஹாஸ்டலுக்கு வரும்பொழுது கூடவே ஒரு பக்கக் கடிதம் எழுதுவார். படிப்பை விட்டுவிடாதே கண்ணா என்று அறிவுரை வழங்குவார். அவ்வப்பொழுது நான் காசு அதிகம் செல்வழிக்கிறேன் என்று சூசகமாக சுட்டிக் காணிபிப்பார். அக்கடிதம் வந்த ஒருவாரம் ரொம்ப நல்ல பிள்ளையாக ஜாக்கிரதையாக செலவழிப்பேன். அதன்பின் கொஞ்சம் அப்படி இப்படி அதாவது ஹோட்டல், சினிமா என்று ஊரைச்சுற்றுவேன். ஆனால் அப்பாவின் கடிதத்தில் இருந்த அறிவுரையின் ஆழம் என் மனதின் ஓரத்திலிருந்து கொண்டு என் தலையில் அடிக்கடிக் கொட்டு வைக்கும்.

என் தாத்தா 1940களில் அவருடைய சகோதரிக்கு எழுதிய கடிதங்களை பரணில் பார்த்திருக்கிறேன். அவர் அப்பொழுது பிரம்மச்சாரி. தனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்று புலம்பித் தீர்த்தது, சகோதரிக்கு பணம் அனுப்ப முடியவில்லையே என்று வருத்தப்பட்டது இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்கள். அவருடைய சகோதரி அவள் கணவருக்கு இரண்டாந்தாரமாக வாக்கப்பட்டு போனது இவருக்கு வருத்தம். அதை நாசூக்காக சொல்லி சகோதரிக்கு மட்டும் புரியுமாறு கேள்வி கேட்டு எழுதுவது. வெறும் மூன்றாம் வகுப்பே படித்த அவள் அண்ணனுக்கு அழகுத்தமிழில் கடிதம் போட்டது. கல்லூரி முடித்து வேலைக்கு சேர்வதற்கு இடைப்பட்ட மூன்று நான்கு மாதங்கள் வெட்டி ஆபீஸராக இருந்தபொழுது மதியம் தூங்குவதற்கு முன்பும், பிறகு இரவு நீண்ட நேரம் விழித்திருந்து மாடி அறையில் நான் மட்டும் தனிமையில் படித்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.

ஆனால் நான் எழுதிய / படித்தக் கடிதங்களிலேயே என்னை இன்றுவரை உலுக்கிக் கொண்டிருப்பது எதிர்வீட்டு பாட்டி தன் 78-80வயதுகளில் எழுதியவை, அதாவது என்னை எழுதச் சொன்னவை. அவளுடைய மகன் புதுக்கோட்டையில் அரசாங்க வேலையில் இருந்தும் பாட்டியை சரிவர கவனித்துக் கொண்டதில்லை. பாட்டி அடிக்கடி புலம்பி கடிதம் எழுதுவாள். என்னை எழுதச் சொல்லுவாள். வரிகள் சொல்லச்சொல்ல பாட்டிக்கு கண்ணீர் கொட்டும். புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே சொல்லுவாள். நானும் அழுவேன். அது அன்று கற்றுக் கொடுத்த பாடம் என்றும் அப்பா அம்மாவை கைவிடக் கூடாது. அதே போல் நாமும் நம் குழந்தைகளை சரிவர வளர்க்க வேண்டும். முதுமை மிகவும் கொடுமை. அதுவும் ஆதரவற்ற முதுமை யாருக்கும் வரவே கூடாது.

கடிதப்போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தாலே தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆங்கில வழிக்கல்வியில் படித்த என் ஒன்றுவிட்ட அண்ணன் பல வருடங்கள் தமிழிலேயே கடிதம் எழுதிவந்தான். இன்று பேங்க் ஸ்டேட்மெண்ட்டுகளிலும், அரைகுறை வார்த்தைகளைக் கொண்ட டங்கிலீஷ் குறுஞ்செய்திகளிலும் தமிழ் தடம்புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்பது நிதர்சமான உண்மை. மின்னஞ்சலில் எல்லாம் குறுஞ்செய்தி வடிவங்களில், ஆங்கிலத்தில் தான் பலர் கடிதம் எழுதுகிறார்கள். தமிழில் எழுத பல்வேறு வசதிகள் இணையத்தில் உள்ளன. நல்ல தமிழில் தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நான் கூடுமான வரை என் தெரு நண்பர்கள், உறவினர்களுக்குத் தமிழிலேயே மின்னஞ்சல் எழுதிகிறேன்.

உங்கள் வீட்டில் உள்ளோர் நலம் பற்றி பதில் கடிதம் போடவும்.

தங்கள் அன்பு எழுத்தாளன் – தி.சு.பா.

என் எண்ண ஓட்டத்தினின்று….

என் எண்ண ஓட்டத்தினின்று பிறக்கும் இந்த எழுத்துக்களை வாழ்க்கை ஓட்டத்திற்கு ஈடு செய்து ஓட வைக்க ஒரு முயற்சி தான் இந்த இணையதளம். என் எண்ண ஓட்டத்தை சோதனை செய்ய ஓர் ஆடுகளம். என் மரணத்தோடு இந்த எண்ணமும், அதன் எழுத்துக்களும் நின்று போகின்றனவா? வாழ்க்கை வற்றாத ஜீவ நதியைப் போல், ஓடிக் கொண்டே இருக்கிறது. என் மரணத்திற்கு அப்பாலும் ஓடும். என் எண்ண ஓட்டத்தை அடுத்தத் தலைமுறயினருக்கு எடுத்துச் செல்லும் கடமை வாழ்க்கை ஓட்டத்திற்கு இருக்கிறது. வாழ்க்கை ஓட்டம், எண்ண ஓட்டத்தை தன் முதுகில் ஏற்றி செல்வதால் என் எழுத்துக்களுக்கு மரணம் என்ற ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. என் எழுத்துக்களுக்கு மரணம் இல்லாத காரணத்தினால் எனக்கும் மரணம் இருப்பதற்கு வாய்ப்பில்லை!

இன்று ஆரம்பித்த இந்த முயற்சி, ஓட்டம் இறுதி வரை செல்லும். வாழ்வின் இறுதி வரை செல்லும்!!!!