கல்கி சிறுகதை (01-05-2011) – கிழக்கும் மேற்கும்

**********************************************************************************************************************

நானும் அவளும் காதலிப்பது சுத்தமாக என் அப்பாவுக்குப் பிடிக்கவில்லை. அவள் அமெரிக்கன் என்பதால் எதிர்க்கிறார். பயப்படுகிறார். கறுப்பி என்றாலாவது கொஞ்சம் யோசிக்கலாம். ஷானன் மாதிரி நல்ல குணவதி அமெரிக்காவில் வலைவீசித் தேடினாலும் கிடைக்கமாட்டாள். எத்தனை முறை எடுத்துச் சொல்லியும் அப்பா புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார். இந்தியாவில் வளர்ந்தவர், அவ்வளவுதான் அவரது இங்கிதம். மனதும் மனதும் சார்ந்த விஷயம்தான் திருமணம். அவரைப் பொறுத்தவரை குடும்பமும் குடும்பமும் சார்ந்ததுதான் திருமணம்.

எங்கள் குழுவில் நிறைய நாட்டு ஆண்களும் பெண்களும் இருக்கிறோம். நம்மூர் கான்பூர் பெண் ஷீடல் மாதூர் கூட இருக்கிறாள். ஆனால், எனக்கு ஷானனைத் தான் பிடிக்கிறது. மூன்று வருடங்களாகக் காதலிக்கிறேன். பொதுவாக முக்கால்வாசி அமெரிக்கர்களை அருகில் சென்று பார்த்தால் உடம்பு முழுக்க சிவப்பு சிவப்பாகச் சொறிவந்து பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். ஆனால் ஷானன் அழகோ அழகு. பிரெஞ்சு ஃப்ரைஸ் சாப்பிட்டு தொந்தி விழுந்த அமெரிக்கப் பெண்கள் போலல்லாமல், உடற்பயிற்சி செய்து உடம்பை சிக்கென்று வைத்திருப்பாள். அவள் சிரிப்பதைப் பார்த்தால் உடம்பில் ஓர் உற்சாகம் பிறக்கும். சூரியனார் கோயில் சிற்பம்தான்! அவளுக்கு இருக்கும் அறிவும் முதிர்ச்சியும் என்னை ஆச்சர்யப்பட வைக்கும். எதையும் பிரித்து ஆராய்ந்து, உள் வரை சென்று அதனைப் புரிந்து கொள்ளும் பழக்கம் அவளிடம் உண்டு. அவளுக்கு இந்தியக் கலாசாரத்தில் மிகுந்த ஈடுபாடு. ஏனென்றால் அவள் அப்பா எங்கோ ஒருமுறை கீதை, வேதம் பற்றிய வகுப்பில் கலந்துகொண்டு அதனால் ஈர்க்கப்பட்டதாகவும், இவளிடம் நிறைய கதை கதையாகச் சொல்லியிருப்பதாகவும் கூறுவாள். ஜூலியா ராபர்ட்ஸ் இல்லையா? ஆனால், என் அப்பாவிடம் எப்படிப் புரிய வைப்பதென்று புரியவில்லை. அம்மாவுக்கு நான் என்றால் உயிர். அதனால் இதற்கு எதுவும் மறுப்பு சொல்லமாட்டாள், சொல்லவில்லை.

ஒருமுறை நான் ஷானனை அப்பா இல்லாத சமயம் வீட்டுக்குக் கூட்டிக் கொண்டு வந்தேன். லைட் பிங்க் டாப்சும், ப்ளூ டைட் ஜீன்ஸும் அணிந்திருந்தாள். இரண்டுக்கும் இடையில் ஒரு இன்ச் இடைவெளி. நெடுநெடுன்னு ஐந்தடி எட்டங்குலம், டைட் ஜீன்ஸும் அதுவுமாக அருமையாக இருந்தாள். மிகவும் தன்மையாகப் பேசினாள். அம்மாவுக்கு அவளை ரொம்பப் பிடித்துவிட்டது. ஷானன் வந்தது முதற்கொண்டு அம்மாவையும், அவரது உடை, தோடு, வளையல், பொட்டு, உடல் மொழி என எல்லாவற்றையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அம்மாவைப் பிடித்துவிட்டது.

சில நாளில் அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டாள். தேவையில்லாத பயம் அப்பாவுக்கு. இந்தியப் பெற்றோரிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம், தன்னுடைய பயம், அனுபவம் எல்லாவற்றையும் கண்ணை மூடிக்கொண்டு தன் குழந்தைகள் மீது திணிப்பது. இதையெல்லாம் சப்பைக்கட்டு கட்டி, “ஏன்டா ஃபூல், நாளைக்கே வெள்ளைக்காரி டைவர்ஸ் அது இதுன்னு சொன்னா என்னடா பண்ணுவ,” எனப் பிதற்ற, “டேட், இந்த மாதிரி பயப்படத் தேவையேயில்ல. அவ நம்ம கல்ச்சர மதிக்கறா….ஹரே ராமா ஹரே கிருஷ்ணா கோயிலுக்கு வர்றா….”

“அதெல்லாம் சரிடா… காலங்காத்தால ப்ரேக்ஃபாஸ்ட்டுக்கே பீஃப் சாப்பிடுவாள்… நாம சிக்கன், மட்டன் மட்டும்தான்…” என்று என்னை நிக்க வைத்துக் கேட்டுக் கொண்டே போனார்.

“டேட்… இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா?”

“இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயம் தான்டா நாளைக்கு பூதாகாரமா வெடிக்கும்.ஒனக்கு ஒரு புதுமொழி தெரியும்னு நினைக்கிறேன். எவன் ஒருத்தன் அமெரிக்க சம்பளம், இந்திய பொண்டாட்டி, சைனா உணவு கெடைக்கப்பெறுறானோ அவன்தான் பாக்கியசாலின்னு….”

“இதெல்லாம் என்ன பேத்தல்? அன்ரியலிஸ்டிக்… அப்படீன்னா இண்டியால எவனுமே டைவர்ஸ் வாங்கறதில்லியா? இந்த சினிஸிசம் தானே வேண்டாங்கறது.”

“வாய மூடு, ப்ரணவ்… எதுத்து எதுத்துப் பேசாதே. போனாபோகுது சின்னப்பையனா இருக்கியேன்னு எடுத்துச் சொன்னா ரொம்பத்தான்… என்னடா? அவள நீ கல்யாணம் பண்ணிக்கக்கூடாது. அப்படிப் பண்ணிக்கிட்டா… தெரியும் சேதி…” என்று பொரிந்து தள்ளினார்.

எனக்குள் ஒரு சுனாமி கொந்தளித்தெழுந்தது.

“எனக்கு ஆச்சு, அவருக்கு ஆச்சு நான் ஷானனைத் தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்…”

“ராஸ்கல்… சொல்லச் சொல்லப் பிடிவாதமா பேசற நீ… லிசன்… ஐ வில் ஷூட் யூ இஃப் ஐ ஸீ யூ வித் ஹெர்…”

“சும்மா பேசிக்கிட்டே போகாதீங்க… ஒங்க பிசினஸ் ஃப்ரண்ட் எவனோ இருக்கான்னு, அவனோட கேனப் பொண்ணுக்கு என்னைக் கட்டிவச்சுத் தள்ளிவிடப் பாக்கறீங்கன்னு கேள்விப்பட்டேன்… வாட் த ஹெக் இஸ் திஸ்? சுத்தப் பட்டிக்காட்டுத் தனம்?”

“ப்ரணவ்…..என்னைப் பத்தி ஒனக்குத் தெரியாது. என்னோட வௌயாடாதே சொல்லிட்டேன். ஷானனை மறந்திடு. அவ்வளவுதான் சொல்ல முடியும்.”

அதற்குப் பிறகு அந்த மனுஷனிடம் பேச முடியாதென்று அங்கிருந்து கிளம்பி விட்டேன். எனக்குக் கோப நிவாரணி ஷானன்தான். வீட்டில் நடந்ததைச் சொன்னேன். இஸ்கான் கோயிலுக்குப் போகலாம் என்றாள். எனக்கு இஷ்டமில்லை. வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொண்டேன். நமது கடவுள்களிடம் அவளுக்கு அபார நம்பிக்கை. எனக்கு அவ்வளவு நம்பிக்கை இல்லை. எத்தீஸ்ட் தான். கோயிலைவிட்டு வெளியே வந்து, அங்கே பராமரிக்கப்படும் புல் வெளியில் காலார அமைதியாக நடந்தோம். எதிரே இருந்த ஃபௌண்டனும், சிவந்த கீழ்வானமும், ஆங்காங்கே பாடும் பறவைகளுமாக, காதலுக்கேற்ற சூழ்நிலையை நொடிப்பொழுதில் உருவாக்கின. மிக ரம்மியமாக இருந்தது. சின்ன சில்மிஷத்துக்குக் கூட அவள் அனுமதிக்கவில்லை. கோயிலைச் சுற்றிய பகுதியில் சக்தி அலை இருக்கும் என்றெல்லாம் விளக்கம் கொடுத்தாள்.

சிறிது நேரம் மௌனம் காத்தோம். மௌனத்தை அழகு வார்த்தைகளால் உடைத்தாள்.

“ப்ரணவ், நாளைக்கு சாய்ந்திரம் எங்க அக்காவுக்கும் வெய்னுக்கும் கல்யாணம். அந்த சிக்ஸ்டீன்த் ஸ்ட்ரீட்-ல ஒரு சர்ச் இருக்கும் இல்ல. போன மாசம் போனோமே… அங்கதான் வந்துடு. ஓ.கே.வா? நான் இன்னிக்கு காலேல ஒனக்கு இன்வைட் அனுப்பிச்சேனே, பாத்தியா?”

“இல்லை ஷானன். எங்க அப்பா கூடவே எனக்கு டைம் சரியா போச்சு.”

“சரி கண்டிப்பா வந்துடு, ப்ரணவ்…” என்றாள்.

மறுநாள் அவள் அக்கா திருமணத்தில் கலந்துகொண்டேன். மாப்பிள்ளை, பெண்ணையும் சேர்த்து மொத்தம் ஏழே பேர் தான் கலந்து கொண்டோம். ஆச்சர்யம். அதே சமயம் அருமையோ அருமை. சிம்பிளான கல்யாணம். ஷானன் என்னை தன் நண்பன் என்று எல்லோரிடமும் அறிமுகப்படுத்தினாள். இங்கேயே இருபது வருடமாக இருந்தாலும், அமெரிக்காவில் நான் கலந்து கொள்ளும் முதல் கல்யாணம் இதுவே. கல்யாணம் முடிய ஒரு மணி நேரம்தான் ஆனது; அருமை. எல்லாரும் ஹோட்டலுக்குப் போய் சாப்பிட போனோம். மொத்தம் மூன்று மணி நேரத்தில் கல்யாணம் முடிந்து, மணமக்கள் சரியாக ஒன்பது மணிக்குப் படுக்கச் சென்று விட்டனர். இப்படியல்லவா திருமணம் இருக்க வேண்டும்.

ஒருநாள், என்னை அவள் வீட்டுக்கு வரச் சொன்னாள். அவள் பெற்றோரிடம் பேச வைத்தாள். அவள் தந்தைக்கு இந்தியா, நமது கலாசாரம் பற்றிய அறிவு அபாரம். அவளது அம்மாவுக்கும் என்னைப் பிடித்துவிட்டது.

“அம்மா, அப்பா… நான் ப்ரணவை கல்யாணம் செஞ்சுக்கலாம்னு இருக்கேன்” என்றாள் ஷானன்.

நான் அமைதியாக இருந்தேன்.

“நல்லா யோசிச்சுதான் முடிவெடுத்திருக்கியா?” என்றாள் அவள் அம்மா.

“ஆமாம்….எனக்கு ப்ரணவை ரொம்ப பிடிக்கும். ரொம்ப முக்கியமான விஷயம். நாங்கள் ஐம்பது வயதுக்குப் பின் இந்தியாவில் வாழலாம் என்று முடிவெடுத்திருக்கிறோம்” என்றாள்.

அவள் தந்தை, “உனக்கு இந்தத் திருமணத்தில் சம்மதமா?” என்று கேட்டார். “பரிபூர்ண சம்மதம்” என்றேன்.

“எப்போ கல்யாணம்” என்றாள் அவள் அம்மா.

“இன்னும் பதினஞ்சு இருபது நாள்ல. ப்ரணவ் பேரண்ட்ஸ்கிட்ட பேசலாம்னு இருக்கோம்…”

அவ்வளவுதான். ஷானன் என்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொல்லுவதற்கு மொத்தமும் அரை மணி நேரம் ஆனது. ஆனால் நம் வீட்டில் இரண்டு மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தை அப்படியே ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள்.

என் பெற்றோர் சம்மதத்தையும் பெற வேண்டும் என்று ஷானன் ஒரே பிடிவாதமாக இருந்தாள். “அதெல்லாம் சரிப்பட்டு வராது என்றும், எங்கப்பா ஒருகாலும் சம்மதிக்கமாட்டார் – செவிடன் காதில் ஊதிய சங்குதான்” என்றேன்.

அன்று என் வீட்டுக்கு ஷானனை அழைத்து வந்தேன். இந்த அளவு நமது கலாசாரம் மீது நம்பிக்கை வைத்து வளைந்து கொடுப்பவள். அப்பாவுக்கு என்ன கேடு. அவருக்கு எப்போதும் போல ‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’. பேச்சுவார்த்தை படுதோல்வி அடைந்தது. அவர் அம்மாவிடமும் கண்டது, கேட்டதை சொல்லிக் கெடுத்து வைத்திருந்தார். அவள் சென்ற பிறகு அப்பா எனக்கு மிரட்டல் விடுத்தார். வழக்கம்போல என்னைச் சுட்டுத் தள்ளி விடுவேன் என்று.

பதினைந்து நாள் கழித்து அப்பாவுக்கு ஃபோன் செய்தேன். “இன்னும் ஒரு மந்நேரத்தில் எனக்கும் ஷானனுக்கும் கல்யாணம்” என்றேன். அப்பா பதிலேதும் சொல்லாமல் ஃபோனை வைத்தார்.

சீக்கிரமாக கோட் சூட்டும் டையும் அணிந்துகொண்டு, திருமணம் ஆயத்த ஏற்பாட்டுக்குச் சர்ச்சுக்குள் செல்ல வேண்டும் என்று எண்ணிக்கொண்டே எனது அறைக்குள் நுழைய முற்பட்டேன். தற்செயலாக எதிரில் ஷானனின் அறையை நோட்டம் விட்டேன். ஷானன் மங்களகரமாக பட்டுப் புடைவையில் காட்சியளித்தாள். திருமண ஏற்பாட்டுக்குக் கோயில் செல்லத் தயாராயிருப்பதாகச் சொன்னாள் ஷானன். ஒரு கணம் திசைகள், திசைமாற்றிக் கொண்டதாகத் தோன்றியது.

Advertisements

One thought on “கல்கி சிறுகதை (01-05-2011) – கிழக்கும் மேற்கும்

  1. SHANTHINI says:
    பரவாஇல்லை.. சுமாரஆஹா இருந்தது. கதை ஏழுதும் பொது, ஒரு குறிப்பிட்ட நாட்டினரை பற்றி podhuvaha குறிப்பிடுவது மிஹவும் தப்பு. கறுப்பி என்ஹிற வார்த்தை மிகவும் தப்பு. Stereotyping செய்யக் கூடாது. It looks as if youa re looking at only skin color. Even if the hero or whatever he is , is so immature, how can the editorial board allow such a word . For that matter we all are brownies here, and saying that word is liable for a person to get arrested. Be more sensitive and the black skin white skin concept has been flogged to death. Be open.

    ————————————————————————————

    BALAKRISHNAN says:
    Shanthini, Thank you for your comments. Please note the words “கொஞ்சம் யோசிக்கலாம்”. That means, from that boy`s standpoint love is important rather than the color or nationality. Also, he is thinking from his father`s standpoint. He is definitely not looking at skin color. Please note the very first sentence describing that girl ” ஷானன் மாதிரி குணவதி….” – only after using this sentence, he describes her physical appearance. Thank you again for your valuable feedback. Thi. Su. Ba.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s