pathavi-uyarvu

பதவி உயர்வு

 தி.சு.பா

கிருஷ்ணாவுக்குள் வெந்நீரூற்று ஒன்று கொதித்தெழ இருந்தது.

“என்னை என்ன இநா வாநா ன்னு நெனச்சுண்டானா? நாலு வருஷமா ப்ராஜக்ட் லீடரா இருக்கேன் ம்…ஹ்ம்…..ப்ராஜக்ட் லீடராவேஏஏ இருக்கேன்….ஆனா நீ…..வருஷம் தவறாம ப்ரமோஷன் வாங்கிண்டு போற….”

இந்த கோபத்திற்கு ஊக்கியாக அந்த காலைப்பொழுதில் இருந்தது எதுவென்று தெரியாது. ஆனால் கிருஷ்ணா படு கோபமாக இருந்தான். அவனுடைய ப்ராஜக்ட் மேனேஜருக்கு ஸஹஸ்ரநாமம் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்.

“ராஸ்கல்லு…நான் கேக்கறதெல்லாம் அஸிஸ்டெண்ட் ப்ராஜக்ட் மேனேஜர் ப்ரமோஷன் தானே…கொடுத்தா கொறஞ்சா போய்டுவ? ப்ராஜக்டோட ஏபிசிடி தெரியுமா உனக்கு? ஒரு இமெயில் அனுப்பறதுக்குள்ள நூறு வாட்டி கால் பண்ணுவ….”

வேலை – வாழ்க்கை! இதன் விகிதாச்சாரம் சரிவர அமைக்கத் தெரியாமல் திணறும் லட்சோபலட்சம் ஐ.டி. இளைஞர்களில் கிருஷ்ணாவும் ஒருவன். அன்று காலை அவனுக்கு ஆறுதல் சொல்ல அவன் வீட்டில் ஒருவரும் இல்லர். கோபம் அடங்க வேண்டுமானால், கேள்விகள் குறைய வேண்டும். இல்லையேல், “எங்க போனேள், எல்லாரும்? அப்பாஆஆ….பக்கதாத்து கிழம் கூட பேசலன்னா ஒனக்கு பொழுது விடியாதே? அம்மா…மா……அம்மாவ்……கடைக்குப் போயிட்டியா? காலங்கார்த்தால எழுந்த ஒடனே தான் ஒனக்கு ஞாபத்துக்கு வரும்….அதில்ல, இதில்லன்னு…..த்து…..”

ஐ.டி. இளைஞர்களுக்கு வேலையின் கடுமை ஒரு பக்கம். ப்ராஜக்ட் மேனேஜர் கொடுமை ஒரு பக்கம். ப்ராஜக்ட் லீடர் படுத்தல் ஒரு பக்கம். டீம் மெம்பர்கள் தொல்லை ஒரு பக்கம். இதெல்லாவற்றிற்கும் மேல் பதவி உயர்வு, சம்பள உயர்வு கவலை ஒரு பக்கம். இப்படி அவர்களைப் பற்றி பக்கம் பக்கமாக சொல்லிக்கொண்டே போகலாம்!

அவன் வீட்டுக் கூடத்திலிருந்து கிழக்கே சமையல் கட்டை நோக்கி நடந்தான். நுழையும் தருவாயில், அங்கே தொங்கிக் கொண்டிருந்த காலண்டரில் தேதியைக் கிழித்தவன், “மிதுனம்….ம்ம்ம்ம்ம்…..அப்பா, சந்திராஷ்டமம் இல்ல…இன்னிக்கு நறுக்குனு நாலு வார்த்தை கேட்டுடலாம்னு இருக்கேன்….அடப்பாவி! நா ஒனக்கு என்னடா துரோகம் பண்ணேன்…என்ன மட்டும் ஏன்டா இப்படி சோதிக்கற?”

சமையல் கட்டுக்குள் நுழைந்தவன், சற்றுமுன் அவன் அம்மா ஒறக்குத்தி வைத்திருந்த பாலில் காபியை போட்டுக் குடிக்க ஆரம்பித்தான். மடக் மடக்கென்று குடித்தி விட்டு பென்டியம் ப்ராஸசர் வேகத்தில் வெளியே வந்தான். எதிரே கூடத்தில் வலதுபுறம் பரவியிருந்த சுவரை நோக்கினான். ஆக்ரோஷம் வார்த்தைகளாக உருவெடுத்து, ஆடிப்பெருக்கு வெள்ளம் போல் திரண்டு எழுந்தது.

“டேய்! டேய்! அந்த ப்ரஸ்ண்டேஷன் அவுட் அண்ட் அவுட் நா பண்ணிக் கொடுத்ததுடா…..எனக்கு அல்வா கொடுத்துட்டு நீ மட்டும் ப்ரமோஷன் வாங்கிண்டுட்ட…அசிங்கமா இல்ல? எப்படி இருக்கும்? நீ ப்ரஜக்ட் மேனேஜராச்சே…அதெல்லாம் கூட பரவால்லடா….ஒரு வாட்டி கிளையன்ட் விசிட்டுனு கூட்டிண்டு போன…நானும் பெருமையா இருந்தேன்….மொத நாள் ராத்திரி மூணு மணி வரைக்கும் கண் முழிச்சு எதஎதையோ வேற படிச்சு வச்சேன்…..அந்த கான்ஃபிரன்ஸ் ஹாலுக்கு கூட்டிண்டு போய் ப்ரின்ட் அவுட்டுக்கெல்லாம் ஸ்டேப்ளர் போட சொன்ன பாரு….அப்புறம் அந்த…..அந்த பேப்பர்ஸ் எல்லாத்தையும் ஃபைல்ல அடுக்கி தர சொன்ன பாரு….அங்கயே தூக்கி போட்டு மிதிச்சுருப்பேன்….ஒன்ன தான்டா…”

கிருஷ்ணா ஒரு நிலையில் இல்லை! ஒறக்குத்திய பாலில் காபி, சௌக்காரம் போட்டு குளியல், கறுப்பு &சாம்பல் நிற சாக்ஸ் என்று ஒரு வழியாக அலுவலகம் கிளம்பினான். இதில் எதுவும் அவனுக்குத் தெரியாது. அவன் கடிவாளம் போட்ட குதிரை!

எந்தவொரு அலுவலருக்கும் அவரவர் நிலை நியாயமானதாகவே இருக்கும். உதாரணத்திற்கு ப்ராஜக்ட் லீடருக்கு தன் டீம் மெம்பர்களையும், ப்ராஜக்ட் மேனேஜரையும் கரித்துக் கொட்டவில்லையென்றால் தூக்கம் வராது. அது போல் டீம் மெம்பர்களுக்கு ப்ராஜக்ட் லீடரை காலை வாரி விடுவதில் அலாதி இன்பம். ப்ராஜ்க்ட் மேனேஜருக்கோ தன் கீழ் பணிபுரியும் மக்களையும், பெருந்தலை என்று அழைக்கப்படும் வி.பி.க்களையும் பொரிந்து தள்ளியாக வேண்டும். கிருஷ்ணா மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன?

“என் பேட்ச்ல சேர்ந்த எல்லாரும் அ.மேனேஜரா எப்பவோ ப்ரமோட் ஆயிட்டா. நா மட்டும் தான் லெஃப்ட் அவுட். இத விட கொடுமை எங்கயும் கிடையாது. முடிவா சொல்லிட்டேன். இல்லன்னா உன் ப்ராஜக்ட்லேர்ந்து ரிலீஸ் தான்டீ. கொழஞ்சுண்டே வருவ இல்ல, அப்போ வச்சுக்கறேன்….அப்போ வச்சுகக்றேன்னே…”

இவ்விதம் திருவான்மியூர் ஃபர்ஸ்ட் சீவார்டிலிருந்து புலம்பிய வண்ணம் பெருங்குடி அலுவலகம் நோக்கி தன் பைக்கில் சென்று கொண்டிருந்தான். அவன் சிக்னலில் காத்திருந்த பொழுது உரக்க பேசிய வசனங்களை யாரும் காதில் வாங்கி கொண்ட மாதிரி தெரியவில்லை. அந்த சாலையில் பயணிப்பவர் அனைவரும் ஐ.டி. மக்களே!!!

அலுவலகத்திற்குள் நுழைந்தவன் யாரிடமும் சரியாக பேசவில்லை. தன் இருக்கையில் அமர்ந்து கொண்டவன், வந்தததும் வராததுமாக ப்ராஜக்ட் மேனேஜரை தொலைபேசியில் அழைத்தான்.

“சேகர்! இன்னிக்கு டெவெல்வ் ஓ க்ளாக் ஃப்ரீயா இருப்பீங்களா?”

“யெஸ், கிருஷ்ணா! என்ன விஷயம்?”

“ஒங்க கிட்ட கொஞ்சம் பேசணும், அதான். நேர்ல வந்து சொல்றேனே…”

“ஓகே, நோ ப்ராப்ளம்…மீட் யூ அட் டெவெல்வ் நூன்”

தனது கம்ப்யூட்டரின் மானிட்டரை ஒருமுறை நோட்டம் விட்டான். கறுப்பாக இருந்தது. அதை எதுவும் தொந்தரவு செய்யாமல் காபி குடிக்க கிளம்பினான். ஒரே யோசனை! எப்படி ஆரம்பிக்கலாம், என்ன பேசலாம் என்று அவன் மனது கேள்வி மேல் கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தது.

“ச்ச…..ச்ச…அப்படி கேட்டு டென்ஷன் ஆயிட்டான்னா? சாதரணமாவே சிடு சிடுன்னு தான் இருப்பான். அத சொல்லவே கூடாது….இப்படித்தான்……இத சொல்லணும்…..அப்படியே நிறுத்திக்கணும்….என்ன சொல்ற?….ஆமாம், மீதிய அவன பேச விட்டுறணும்…..”

வழியில் நாலைந்து பேரைச் சந்தித்தான். எல்லாரிடமும் ஏதோ பிதற்றித் தள்ளிவிட்டு தன் இருக்கைக்குத் திரும்பினான்.

“கிருஷ்ணா…”

“கிருஷ்ணா…”

அவன் கீழ் பணிபுரியும் டீம் மெம்பர் ஒருவன் அவனை சிலமுறை அழைத்த பின் திரும்பினான்.

“யெஸ்….சொல்லு”

“ஒங்கள லெவன் ஓ க்ளாக் மீட் பண்ணனும்….ஃப்ரீயா இருப்பீங்களா?”

தன் நிலையில் இருந்து மீள முடியாமல் தவித்து கொண்டிருந்ததால், அவனிடம் “என்ன சொன்ன?”என்று திருப்பிக் கேட்டான்.

“ஒங்கள லெவன் ஓ…………..”

“எ…எ….எதுக்கு?”

கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவன், “இப்பவே மீட் பண்ணலாமே!”என்றான்.

“ஒங்களுக்கு தெரியாததில்லை….நா ப்ரோக்ராமரா மூணு வருஷமா இருக்கேன். ஸீனியர் ப்ரோக்ராமர் ப்ரமோஷன் பத்தி பேசலாம்னு….”

சற்று நேரம் யோசித்தவன், “கண்டிப்பா…நா சேகர் ட பேசிட்டு சொல்றேன்…..”

“ஒகே…தேங்க்யூ….பாசிட்டிவா சொல்லுங்க கிருஷ்ணா!”

“ஷ்யூர்…ஷ்யூர்….”

அவன் செல்பேசியில் ஓர் அழைப்பு,”ஹே, கிருஷ்ணா! சேகர் ஹியர். இப்போ ஃப்ரீயா தான் இருக்கேன். ஏதோ பேசணும்னு சொன்னியே, இப்போவே வாயேன்….”

“ஒண்ணுமில்ல சேகர், நேத்திக்கு அந்த இமெயில் அனுப்ச்சோம்ல அதைப் பத்தி தான்…..ஒண்ணும் அவசரமில்ல………………………”

தி.சு.பா

Advertisements

One thought on “pathavi-uyarvu

  1. உண்மை தான். இன்றைய சூழலில் மனிதன் ஏமாற்றத்தையும் கோபத்தையும் தன் வாழ்க்கை முன் அர்ப்பணித்து விடுகிறான்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s