நம் கல்வியும் என் கேள்வியும்

தி.சு.பா.

நம் கல்வியும் என் கேள்வியும்

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏழை மக்கள் கட்சி) டெல்லி தேர்தலில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்த காரணத்தால் ஒரு கட்சி ஜெயித்து விடமுடியுமா? ஆட்சி பீடத்தில் ஏறிவிடுமா? என்றால் இந்திய அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் முடியும் என்றே தோன்றுகிறது. 1947லிருந்து 1967 வரை இருபது வருடங்களை விட்டுத் தள்ளிவிடலாம். அதன்பின் கட்சிகளின் நோக்குநிலையிலிருந்து பார்த்தால், இந்திய அரசியலில் பெரிய அதிரடி மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. மாற்றுக் கருத்தைக் முன்வைத்த கட்சிகள் ஆங்காங்கே ஆட்சியைப் பிடித்துள்ளன. மாற்றத்தைத் தருவதாக வந்த அக்கட்சிகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் ஒரே குட்டையில் ஊறியவையாக ஆகிவிடுகின்றன. ஏன்?

அரசியல்வாதிகளைத் திருத்திவிடுவதால் ஊழலைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடமுடியுமா? கண்டிப்பாக இல்லை. ஊழல் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தியாகத் தான் இருக்க முடியும். ஒரு பக்கம் மக்கள், மறுபக்கம் அதிகாரிகள், அரசியல்வாதிகள். இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டிக் காண்பிக்கிறார்கள். இருவருமே ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் தாம். சரி ஒரு வேளை சட்டம் சரியில்லையோ? அப்படியென்றால் சட்டம் கெடுபிடியாக இருக்கும் நாடுகளிலெல்லாம் ஊழலே இல்லையா?

என்னையே எடுத்துக் கொண்டால், சுமார் 15-17 வயது வரை எந்த பாவச் செயல்களிலும் நான் ஈடுபட்டதில்லை. ஒருவித பயம். அப்பா அதட்டுவார், கடவுள் கண்ணைக் குத்தும் என்று. படிதாண்டா பத்தினி மாதிரி தெரு தாண்டா பையன். ஆனால் வயது ஏற ஏற என்னால் இந்த சமத்து பையன் கெட்டப்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. நாம் கற்ற கல்வியும், அதில் சொல்லிக்கொடுக்கப்பட்ட நீதிக்கதைகளும் என்னவாயிற்று? இரத்தத்தில் கலந்த படிப்பு ஜீரணமாகி, மலமாக வெளியே வந்து விட்டதோ?

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கல்வி முறையில் மாற்றம் தேவையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, எவ்வளவு ரம்மியமான இசையைக் கேட்ட போதினும், சிம்பொனி இசையை சிறிது நேரம் கண்ணெதிரே கண்ட போதினும், இளையராஜா என்ற மாமனிதரின் இசை தான் என் மனதில் ஓட்டம் பிடிக்கிறது, துள்ளி ஆடுகிறது. அவரைத் தாண்டிய ஓர் இசை அறிஞரை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஏன்? அதற்கு காரணம் என் சிறுவயதில் அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கம். என் மரணப்படுக்கை வரை என்னால் இதை மாற்றிக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. அதே போல் தான் என் தந்தைக்கு சிவாஜி. அவர் அவரின் வெறித்தனமான ரசிகர். இந்த மாதிரி சிறுவயதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக கல்வி இருந்தால் ஊழலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே நம்புகிறேன். குறிப்பாக 10வயது முதல் 15வயது வரை உள்ள சிறார்களுக்கு இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கு ஒரே பாடம், ஒரே கருத்தை அவர் மனதில் திணிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு இதெல்லாம் எங்கு ஓடிவிடப் போகிறது. 15 வயதிற்கு மேல் படித்துக் கொள்ளலாமே? இந்த இணைய உலகில் இந்த படிப்புகள் எல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்று தோன்றுகிறது.

ஆறாவதிலிருந்து பத்தாவது வரை என்ன படித்தேன்? எதுவும் முழுசாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஆங்காங்கே படித்த ஒன்றிரண்டு மனப்பாட செய்யுள், ஆங்கிலத்தில் வந்த The Road not taken, Timid Tim இந்த மாதிரி செய்யுள், ப்ரோஸ், இப்படி ஞாபகம் வரக்கூடிய விஷயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஆம், நம் கல்வி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விட்டது. தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அது ஒரே கருத்தாக இருக்க வேண்டும், ஒரே விஷயமாக இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கரைப் போல, இளையராஜாவைப் போல. அந்த ஒரே கருத்து, ஒரே விஷயம் ஊழலை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வேண்டுமானால் கல்வியில் சுவாரஸ்யம் கூட அங்கே சுத்தி இங்கே சுத்தி முடிவில் ஊழல் ஒழிப்பிற்கு வந்து விட வேண்டும். மாணவர் சிந்தனையில் வேறு எதுவும் ஏறக்கூடாது, ஏற்றக்கூடாது. இப்படி செய்தால் நல்லதொரு மாற்றத்தை சமுதாயத்தில் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்.

Advertisements

மாற்று அரசியல் அமைப்பு – ஓர் எண்ணம்

மாற்று அரசியல் அமைப்பு – ஓர் எண்ணம் – தி.சு.பா.

ஏற்காடு தொகுதியில் நடைபெறும் பணப்பட்டுவாடாக்களை தினம் தினம் செய்தித்தாள்களில் படிக்கும்பொழுது மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஓர் இடைத்தேர்தல் சீட்டுக்கு இந்த அளவு சண்டை / போட்டி தேவையா? குறைந்தபட்சம் இடைத்தேர்தலில் கூடவா நேர்மையை கடைபிடிக்க முடியாது? இது மட்டுமல்ல, சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே வெளியூரிலிருந்து திருச்சிக்குத் தாமதமாக வந்து சேர்ந்ததால், என் நண்பனொருவனால் சாயங்காலம் 4 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை. நாலரை மணிக்கு நடையை சாத்துவதற்காக அதிகாரிகள் முடிவெடுத்துக் கொண்டிருக்க, இவன் போய் அங்கே நின்றால் இவனுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. இவனுடைய ஓட்டை வேறு யாரோ ஒருவன் போட்டுவிட்டான். பத்து பன்னிரண்டு வருஷத்திற்கு முன்பே இந்த சங்கதி.

ஆசையை மனித மனங்களிலிருந்து அழிக்க முடியாது என்பது திண்ணம். தேர்தலில் அதிகம் பணம் கொடுக்கும் கட்சிக்கு ஓட்டை கும்மாங்குத்து குத்திவிடுவார்கள் பணத்திற்கு ஆசைப்படும் நபர்கள். எங்கள் பக்கத்து வீட்டில் ஓர் அறியாப் பெண் இருந்தாள். அவள் கணவன் அவளை ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு வாக்களிக்கும்படி நிர்பந்தித்தான். எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின் வந்த சமயம். அவள் சற்று தத்துபித்தென்று இருப்பவள். ஏதோ ஒரு பொத்தானை அமுக்கி விட்டு கணவனிடம் சொல்ல பயப்பட்டு இரண்டு நாள் தூக்கம் இல்லாமல் நொந்து போவாள். என் அம்மாவிடம் வந்து, “அந்த பட்டானைத் தான்மா அமுக்கினேன் கரக்ட்டா?, அவர் வந்து கேப்பாரு….மாத்தி அமுக்கிட்டேன்னு சொல்லி மாட்டுக்குவேனோன்னு பயமா இருக்கு…” என்று அமுக்கியது ஒரு பொத்தான், தன் கணவனிடம் டுமீல் விட்டது மற்றொன்று என்று பிதற்றித் தள்ளுவாள். சில சமயம் நானும் என் நண்பர்களும் ஓட்டு போட வரிசையில் நிற்கும்பொழுது காரசாரமாக விவாதித்து விட்டு ஓட்டு போட்டிருக்கிறோம். எல்லாரும் ஒரு மனதாக தீர்மானித்து ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டிருக்கிறோம். ஒருசிலர் எங்கள் தலைவர் சொல்லிவிட்டார், சைகை காட்டிவிட்டார், அதனால் அந்த கட்சிக்குத் தான் என்று ஒற்றைக்காலில் ஓட்டு போட்டதையும் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். உங்கள் தகவலுக்கு, அந்த ஒரு சிலர் நிரம்ப படித்த நபர்கள். அதாவது ஒரு மாலுக்கு செல்கிறோம். அங்கே முருகன் இட்லி கடையில் தின்பதா, சரவண பவனிலா, இல்லை அமெரிக்கன், மெக்ஸிகன் ஹோட்டலிலா என்று மனது அலைபாயும். மனது முருகனைத் தீர்மானிக்க, கால் சரவண பவனுக்கு செல்ல, கடைசியில் வாய் அமெரிக்கன் பிட்சா பர்க்கர் சாப்பிட இட்டுச் செல்லுமே, அந்த மாதிரி. அந்த நிமிடம் வரை எதுவும் நமது கையில் இல்லை. இந்தக் கணக்கு ஹோட்டலுக்கு, சினிமாவுக்கு ஒத்து வரும். தேர்தலுக்கு?

நமது தேர்தல் ஆணையம் பணம், நகைகளை கையும் களவுமாகப் பிடிப்பது, அரசியல்வாதிகளுக்கு நடுநிலையாக நோட்டீஸு அனுப்புவது என்று திறம்பட செய்து வருவது பாராட்டத்தக்கதே. 120 கோடி மக்களை இதனால் திருத்த முடிகிறதா? முடியுமா? என்றால் என்னிடம் பதில் இல்லை.

எனக்கு என்னமோ இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தில் நம்பிக்கை போயே விட்டது. மக்கள் அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்து என்ன சுகம் கண்டார்கள்? அதற்கு மாற்றே இல்லையா? மன்னராட்சி பழைய பஞ்சாங்கம். அது இன்றைய தேதியில் காலாவதி ஆகிவிட்டது. ஏறக்குறைய உலகில் 80%த்திற்கும் மேற்பட்ட நாடுகள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டே ஆட்சியைப் பிடிக்கின்றன. இந்த மாதிரி அவல நிலைகளை காணும் பொழுது ஏன் இந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அமைப்பை மாற்றக்கூடாது என்று தோன்றுகிறது. வேறு என்ன மாற்று இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுதான் இந்த உபாயம் மனதிற்கு எட்டியது.

ஓர் எண்ணம் இங்கே!

ஓய்வுபெற்ற நீதிபதிகள், கலெக்டர்கள், ஜனாதிபதிகள் இவர்களைக் கொண்டு ஒரு குழுவை அமைத்து, அந்த குழு திறமை அடிப்படையில் பிரதம மந்திரி, முதலமைச்சர்கள், முக்கிய மந்திரிகளை தேர்ந்தெடுத்தால் என்ன? இந்த தேர்வு மக்கள் மன்றத்தில் நடக்கலாம். திறமை என்றவுடன் நடுங்க வேண்டாம். அதற்கு நிரம்ப படித்திருக்க வேண்டும் என்று இல்லை. அவர் பிரதமராக, முதலமைச்சராக நல்ல அரசியல் அறிவு இருக்க வேண்டும், நாடு, மாநிலம் பற்றிய கனவு, கொள்கைகள் வேண்டும். இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் ஒவ்வொரு வருடமும் அந்தக்குழுவை நேரில் சந்தித்து அவர் எந்த அளவு பொருளாராதாரத்தில், இன்னபிற காரணிகளில் முன்னேற்றம் கொண்டு வந்திருக்கிறார் என்று நிரூபிக்க வேண்டும். இல்லையேல் அதிகாரக்குழு அவரைத் தூக்கிக் கடாசிவிடும். இந்த முறையால் தேர்தல் செலவு மிச்சம், தேர்தல் ஆணையத்திற்கும் தலைவலி குறைந்தது, இதெல்லாவற்றிற்கும் மேல் தேர்தல் கௌரவக் கொலைகள் எல்லாம் நின்று போய்விடும். குறிப்பாக நாட்டில் சப்தம், இரைச்சல் இருக்காது. தற்போதைய அரசியல் அமைப்பு, வருமான வரி இதற்கு மாற்று கண்டிப்பாகத் தேவை. இவை இரண்டையும் மையமாக வைத்தே 80% ஊழல்கள் நாட்டில், உலகில் தலைவிரித்து ஆடுகின்றன என் பொதுவான கருத்து.

தவிர இந்த புது முறையில் இப்பொழுது நடப்பது போல் தில்லுமுல்லுகள் நடக்கும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதே போல் மாற்று அரசியல் அமைப்பிற்கான ஓர் எண்ணம் என் மனதில் உதயமானது. அதை இங்கே சொல்ல விழைந்திருக்கிறேன். மற்றபடி அரசியல் மூத்த தலைவர்கள், ஊடகங்கள், அரசியல் ராஜதந்திரிக்கள் கூடித் தீர்மானித்து இதற்கான திட்டத்தைத் தீட்டலாம். என் மனதில் தோன்றிய பொறியை தங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். என்னால் மாற்று அரசியல் அமைப்பை முழுவதும் கற்பனை செய்ய முடியாது. அதற்கான நேரமும், தகுதியும் என்னிடம் இல்லை என்றே நம்புகிறேன்.

ஜெய் ஹிந்த்!!!