நம் கல்வியும் என் கேள்வியும்

தி.சு.பா.

நம் கல்வியும் என் கேள்வியும்

அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி (ஏழை மக்கள் கட்சி) டெல்லி தேர்தலில் விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. ஒரு மாற்றுக் கருத்தை முன்வைத்த காரணத்தால் ஒரு கட்சி ஜெயித்து விடமுடியுமா? ஆட்சி பீடத்தில் ஏறிவிடுமா? என்றால் இந்திய அரசியல் வரலாற்றைக் கூர்ந்து கவனித்தால் முடியும் என்றே தோன்றுகிறது. 1947லிருந்து 1967 வரை இருபது வருடங்களை விட்டுத் தள்ளிவிடலாம். அதன்பின் கட்சிகளின் நோக்குநிலையிலிருந்து பார்த்தால், இந்திய அரசியலில் பெரிய அதிரடி மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணமே உள்ளன. மாற்றுக் கருத்தைக் முன்வைத்த கட்சிகள் ஆங்காங்கே ஆட்சியைப் பிடித்துள்ளன. மாற்றத்தைத் தருவதாக வந்த அக்கட்சிகள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்திற்கு பின் ஒரே குட்டையில் ஊறியவையாக ஆகிவிடுகின்றன. ஏன்?

அரசியல்வாதிகளைத் திருத்திவிடுவதால் ஊழலைக் கட்டுக்குள் கொண்டு வந்து விடமுடியுமா? கண்டிப்பாக இல்லை. ஊழல் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தியாகத் தான் இருக்க முடியும். ஒரு பக்கம் மக்கள், மறுபக்கம் அதிகாரிகள், அரசியல்வாதிகள். இருவரும் ஒருவரை ஒருவர் சுட்டிக் காண்பிக்கிறார்கள். இருவருமே ஊழலில் ஊறித் திளைத்தவர்கள் தாம். சரி ஒரு வேளை சட்டம் சரியில்லையோ? அப்படியென்றால் சட்டம் கெடுபிடியாக இருக்கும் நாடுகளிலெல்லாம் ஊழலே இல்லையா?

என்னையே எடுத்துக் கொண்டால், சுமார் 15-17 வயது வரை எந்த பாவச் செயல்களிலும் நான் ஈடுபட்டதில்லை. ஒருவித பயம். அப்பா அதட்டுவார், கடவுள் கண்ணைக் குத்தும் என்று. படிதாண்டா பத்தினி மாதிரி தெரு தாண்டா பையன். ஆனால் வயது ஏற ஏற என்னால் இந்த சமத்து பையன் கெட்டப்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. நாம் கற்ற கல்வியும், அதில் சொல்லிக்கொடுக்கப்பட்ட நீதிக்கதைகளும் என்னவாயிற்று? இரத்தத்தில் கலந்த படிப்பு ஜீரணமாகி, மலமாக வெளியே வந்து விட்டதோ?

ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் கல்வி முறையில் மாற்றம் தேவையோ என்று யோசிக்கத் தோன்றுகிறது. உதாரணத்திற்கு, எவ்வளவு ரம்மியமான இசையைக் கேட்ட போதினும், சிம்பொனி இசையை சிறிது நேரம் கண்ணெதிரே கண்ட போதினும், இளையராஜா என்ற மாமனிதரின் இசை தான் என் மனதில் ஓட்டம் பிடிக்கிறது, துள்ளி ஆடுகிறது. அவரைத் தாண்டிய ஓர் இசை அறிஞரை என்னால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஏன்? அதற்கு காரணம் என் சிறுவயதில் அந்த மனிதர் ஏற்படுத்திய தாக்கம். என் மரணப்படுக்கை வரை என்னால் இதை மாற்றிக் கொள்ள முடியாது என்றே தோன்றுகிறது. அதே போல் தான் என் தந்தைக்கு சிவாஜி. அவர் அவரின் வெறித்தனமான ரசிகர். இந்த மாதிரி சிறுவயதில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயமாக கல்வி இருந்தால் ஊழலுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்றே நம்புகிறேன். குறிப்பாக 10வயது முதல் 15வயது வரை உள்ள சிறார்களுக்கு இப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியாக வேண்டும். அதற்கு ஒரே பாடம், ஒரே கருத்தை அவர் மனதில் திணிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், அறிவியல், வரலாறு இதெல்லாம் எங்கு ஓடிவிடப் போகிறது. 15 வயதிற்கு மேல் படித்துக் கொள்ளலாமே? இந்த இணைய உலகில் இந்த படிப்புகள் எல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை என்று தோன்றுகிறது.

ஆறாவதிலிருந்து பத்தாவது வரை என்ன படித்தேன்? எதுவும் முழுசாக ஞாபகத்திற்கு வரவில்லை. ஆங்காங்கே படித்த ஒன்றிரண்டு மனப்பாட செய்யுள், ஆங்கிலத்தில் வந்த The Road not taken, Timid Tim இந்த மாதிரி செய்யுள், ப்ரோஸ், இப்படி ஞாபகம் வரக்கூடிய விஷயங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

ஆம், நம் கல்வி பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தத் தவறி விட்டது. தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அது ஒரே கருத்தாக இருக்க வேண்டும், ஒரே விஷயமாக இருக்க வேண்டும். சச்சின் டெண்டுல்கரைப் போல, இளையராஜாவைப் போல. அந்த ஒரே கருத்து, ஒரே விஷயம் ஊழலை ஒழிப்பதாக இருக்க வேண்டும். வேண்டுமானால் கல்வியில் சுவாரஸ்யம் கூட அங்கே சுத்தி இங்கே சுத்தி முடிவில் ஊழல் ஒழிப்பிற்கு வந்து விட வேண்டும். மாணவர் சிந்தனையில் வேறு எதுவும் ஏறக்கூடாது, ஏற்றக்கூடாது. இப்படி செய்தால் நல்லதொரு மாற்றத்தை சமுதாயத்தில் கொண்டு வர முடியும் என்று நம்புகிறேன்.

Advertisements