கடிதம்

கடிதம் – தி.சு.பா.

இடம்: அமெரிக்கா
தேதி: 18-நவம்பர்-2013
அன்பு வாசகர்களுக்கு,
வணக்கம். வீட்டில் எல்லோரும் நலமா? எல்லாரையும் விசாரித்ததாக சொல்லவும்.

சமீபத்தில் மகாகவி பாரதி தன் மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்றை படிக்க நேர்ந்தது. தன் மனைவியை காதலி என விளித்து, அவளுக்கு அறிவுரை வழங்கிய மகாகவியின் எழுத்து நடை என் மனதைச் சட்டென்று கொள்ளைக் கொண்டது. அன்றிரவு அக்கடிதம் பற்றியே அசை போட்டுக் கொண்டிருந்தேன். கடிதம் பற்றிய மலரும் நினைவுகளில் மூழ்கி போனேன். அற்றை நாளில் எவ்வளவு கடிதங்கள், காத்திருப்புகள். தபால்காரர் தெருக்கோடியில் வர தொடங்கிய உடனே இதயம் துடிதுடிக்க ஆரம்பிக்கும். இன்றைக்கு வயது முப்பதுகளின் நடுவிலும், நாற்பதுக்கு மேலும் இருந்தால் அவர்கள் ‘கடிதம்’ பற்றிய பல சுவாரஸ்யமான செய்திகளைச் சொல்வர்.

15பைசா, 25பைசா போஸ்ட்கார்டுகளில் எத்தனை தைரியமாக நம் உறவுகள், வீடு சம்பந்தமான ரகசியங்கள் எல்லாவற்றையும் எழுதி அனுப்புவோம். தலைபோகிற காரியம் என்றால் மட்டும் ஒரு ரூபாய்க்கு இன்லேன்ட் லெட்டர் வாங்கி ஒட்டி அனுப்புவோம். அத்துனைக் கடிதங்களிலும் தமிழ் புகுந்து விளையாடியது. எனக்குத் தெரிந்தவரை அப்பா, அம்மா, பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி எல்லோரும் அழகுத்தமிழில் தான் கடிதம் எழுதி வந்தனர். வெறும் ஆறாவதே படித்த என் பெரியம்மா அவ்வளவு அழகான தமிழில் ஆந்திராவிலிருந்து கடிதம் போடுவாள். என்ன மிஞ்சிமிஞ்சி போனால் ஒரு போஸ்ட்கார்டில் இருபது வரி இருக்குமா? அப்படி வரிகள் அதிகமானால் இரண்டு கடிதம் உடனுக்குடன் போடுவார்கள். சிலசமயம் ஒன்றிரண்டு வரிகள் தானென்றால் பிள்ளையார்சுழிக்கு அருகில் இருக்கும் இடத்தில் எழுதுவார்கள். அதே போல் இடது பக்க மார்ஜினில் மேலிருந்து கீழ் எழுதி கழுத்து வலி வர வைப்பார்கள். என் அம்மாவுக்கு மட்டும் புரிய வேண்டும் என்று ஒரு சில வரிகளை கோடிட்டு காட்டுவாள் பெரியம்மா. அதெல்லாம் சிறுவயதில் புரியாது. வயது ஆக ஆக புரிய ஆரம்பித்தது. கடிதம் வந்த நாளில் வீட்டில் தெற்கும் வடக்குமாக நடக்கையில் “அந்த வரில என்ன சொல்லிருந்தா”, “இதைப் பத்தி என்ன கேட்டுருந்தா பெரிம்மா” என்று ஐந்தாறு முறை படிப்போம். அதன்பின் பதில் போடுவோம். ஒருவர் கடிதம் போட்டது முதல், பதில் கடிதம் கிடைக்கும்வரை குறைந்தது உள்ளூராக இருந்தால் 3-4 நாள் ஆகும், அதுவே வெளி மாநிலம், வடக்கே பாம்பே, டெல்லியாக இருந்தால் 10நாள் ஆகிவிடும். மக்களுக்கு அவ்வளவு பொறுமை இருந்தது. இப்பொழுது இரண்டு முறை கால் பண்ணி எடுக்கவில்லை என்றால் அவரிடம் வள்ளென்று விழுவோம்.

என் வாழ்நாளில் நான் பதைபதைப்புடன் காத்திருந்த கடிதங்கள் என்று பார்க்கப் போனால், அவை என் தந்தையிடமிருந்து வரும் மணியார்டர் ஹாஸ்டலுக்கு வரும்பொழுது கூடவே ஒரு பக்கக் கடிதம் எழுதுவார். படிப்பை விட்டுவிடாதே கண்ணா என்று அறிவுரை வழங்குவார். அவ்வப்பொழுது நான் காசு அதிகம் செல்வழிக்கிறேன் என்று சூசகமாக சுட்டிக் காணிபிப்பார். அக்கடிதம் வந்த ஒருவாரம் ரொம்ப நல்ல பிள்ளையாக ஜாக்கிரதையாக செலவழிப்பேன். அதன்பின் கொஞ்சம் அப்படி இப்படி அதாவது ஹோட்டல், சினிமா என்று ஊரைச்சுற்றுவேன். ஆனால் அப்பாவின் கடிதத்தில் இருந்த அறிவுரையின் ஆழம் என் மனதின் ஓரத்திலிருந்து கொண்டு என் தலையில் அடிக்கடிக் கொட்டு வைக்கும்.

என் தாத்தா 1940களில் அவருடைய சகோதரிக்கு எழுதிய கடிதங்களை பரணில் பார்த்திருக்கிறேன். அவர் அப்பொழுது பிரம்மச்சாரி. தனக்கு கல்யாணம் ஆகவில்லையே என்று புலம்பித் தீர்த்தது, சகோதரிக்கு பணம் அனுப்ப முடியவில்லையே என்று வருத்தப்பட்டது இப்படி பல சுவாரஸ்யமான விஷயங்கள். அவருடைய சகோதரி அவள் கணவருக்கு இரண்டாந்தாரமாக வாக்கப்பட்டு போனது இவருக்கு வருத்தம். அதை நாசூக்காக சொல்லி சகோதரிக்கு மட்டும் புரியுமாறு கேள்வி கேட்டு எழுதுவது. வெறும் மூன்றாம் வகுப்பே படித்த அவள் அண்ணனுக்கு அழகுத்தமிழில் கடிதம் போட்டது. கல்லூரி முடித்து வேலைக்கு சேர்வதற்கு இடைப்பட்ட மூன்று நான்கு மாதங்கள் வெட்டி ஆபீஸராக இருந்தபொழுது மதியம் தூங்குவதற்கு முன்பும், பிறகு இரவு நீண்ட நேரம் விழித்திருந்து மாடி அறையில் நான் மட்டும் தனிமையில் படித்த சுகம் வேறு எங்கும் கிடைக்காது.

ஆனால் நான் எழுதிய / படித்தக் கடிதங்களிலேயே என்னை இன்றுவரை உலுக்கிக் கொண்டிருப்பது எதிர்வீட்டு பாட்டி தன் 78-80வயதுகளில் எழுதியவை, அதாவது என்னை எழுதச் சொன்னவை. அவளுடைய மகன் புதுக்கோட்டையில் அரசாங்க வேலையில் இருந்தும் பாட்டியை சரிவர கவனித்துக் கொண்டதில்லை. பாட்டி அடிக்கடி புலம்பி கடிதம் எழுதுவாள். என்னை எழுதச் சொல்லுவாள். வரிகள் சொல்லச்சொல்ல பாட்டிக்கு கண்ணீர் கொட்டும். புடவைத் தலைப்பால் துடைத்துக் கொண்டே சொல்லுவாள். நானும் அழுவேன். அது அன்று கற்றுக் கொடுத்த பாடம் என்றும் அப்பா அம்மாவை கைவிடக் கூடாது. அதே போல் நாமும் நம் குழந்தைகளை சரிவர வளர்க்க வேண்டும். முதுமை மிகவும் கொடுமை. அதுவும் ஆதரவற்ற முதுமை யாருக்கும் வரவே கூடாது.

கடிதப்போக்குவரத்து தொடர்ந்து கொண்டிருந்தாலே தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கும் என்பது என் தாழ்மையான கருத்து. ஆங்கில வழிக்கல்வியில் படித்த என் ஒன்றுவிட்ட அண்ணன் பல வருடங்கள் தமிழிலேயே கடிதம் எழுதிவந்தான். இன்று பேங்க் ஸ்டேட்மெண்ட்டுகளிலும், அரைகுறை வார்த்தைகளைக் கொண்ட டங்கிலீஷ் குறுஞ்செய்திகளிலும் தமிழ் தடம்புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது என்பது நிதர்சமான உண்மை. மின்னஞ்சலில் எல்லாம் குறுஞ்செய்தி வடிவங்களில், ஆங்கிலத்தில் தான் பலர் கடிதம் எழுதுகிறார்கள். தமிழில் எழுத பல்வேறு வசதிகள் இணையத்தில் உள்ளன. நல்ல தமிழில் தெரிந்தவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். நான் கூடுமான வரை என் தெரு நண்பர்கள், உறவினர்களுக்குத் தமிழிலேயே மின்னஞ்சல் எழுதிகிறேன்.

உங்கள் வீட்டில் உள்ளோர் நலம் பற்றி பதில் கடிதம் போடவும்.

தங்கள் அன்பு எழுத்தாளன் – தி.சு.பா.

Advertisements